Sunday, 9 February 2025

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் அறையில், வால் கிளாக்கில் யாரோ ரகசிய கேமரா பொறிப்பு.. அலுவலகம் ஒரே பரபரப்பு!

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் அறையில், கடிகாரத்தில் யாரோ ரகசிய கேமராவை வைத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இங்கு கேமரா வைத்தது யாரை கண்காணிப்பதற்காக? என்பது குறித்த விசாரணை துரிதமாக துவங்கியிருக்கிறது.

கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.. நகராட்சி தலைவராக பரிதா உள்ளார்.

ஃபரிதாவின் கணவர் பெயர் நவாப்.. இவர் நகர திமுக செயலாளராக உள்ளார். இதனால், நகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வந்து ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன.. நாளுக்கு நாள் இவரது செயல்பாட்டினால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், நகராட்சி ஆணையாளர் அறையிலுள்ள சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா இருந்தது தெரிய வந்துள்ளது. இதில் பதிவான காட்சிகளும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகின்றன.. அதாவது, கடந்த மாதம் 25ம் தேதியன்று நவாப், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் காரசாரமாக விவாதம் நடத்துவதும், உடனே நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி சமாதானம் செய்வதும் என காட்சிகள் அதில் பதிவாகியிருக்கின்றன..

இந்த ரகசிய கேமராவை வைத்தது யார்? இதுபோல் வேறு எங்கெல்லாம் கேமரா வைக்கப்பட்டது? என்பது குறித்து விசாரிக்கும்படி கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளரான கிருஷ்ணமூர்த்தி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "கிருஷ்ணகிரி நகராட்சியில்ள்ள எனது அறையில் தமிழ் எண்ணுருக்களுடன் கூடிய சுவர் கடிகாரத்தில் (டிஜிட்டல் கடிகாரம்) ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா எந்த நபரால் பொருத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இது குறித்து ஆணையாளர் சொல்லும்போது, "நான் விடுப்பில் சென்றிருந்தேன். கடந்த 29-ம் தேதியன்று என்னுடைய அறைக்குள், நகராட்சி ஊழியர்கள் நுழையும்போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில், திடீரென பீப் சத்தம் கேட்டது.. இதையடுத்து ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோதுதான், உள்ளே ரகசிய கேமரா இருப்பது தெரிந்தது.

கடிகாரத்தில் இருந்த கேமரா, சிப் எடுக்கப்பட்டுவிட்டது.. ஆனால் சுகாதார ஆய்வாளர், திமுக நகர செயலாளர் இடையே ஏற்பட்ட வாக்குவாத காட்சிகள் மட்டும் வெளியானது எப்படி என்று தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, நகராட்சியில் 4 இடங்களில் டிஜிட்டல் கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.. அப்படியிருக்கும்போது, மற்ற இடங்களில் வைக்கப்படாத ரகசிய கேமரா, என்னுடைய அறையில் மட்டும் வைக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை... இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் அறையிலேயே மர்ம நபர்கள் ரகசிய கேமரா வைத்திருக்கும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

விஜிலென்ஸ் போலீசாரின் வளையத்துக்குள் கலால் உதவி ஆணையர்: காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம் கைப்பற்றல்

விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றன...