ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் நிதியை ஒதுக்க முடியாது என்று அறிவித்திருக்கும் மாண்புமிகு.மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பிற்கு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டப்பின் சார்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜோசப் அன்னையா தலைமை தாங்கினார்.
கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநில செயல்பாடுகள் குறித்து பேசினார்.
முன்னதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ். செல்வகுமார் மற்றும் கே.சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் க.குணசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர். பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
1. ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் நிதியை ஒதுக்க முடியாது என்று அறிவித்திருக்கும் மத்திய அமைச்சர் மாண்புமிகு. தர்மேந்திர பிரதான் அவர்களின் அறிவிப்பிற்கு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டப்பின் சார்பாக கண்டனங்களை தெரிவித்து தீர்மாமனம் நிறைவேற்றப்பட்டது.
2. ஒன்றிய அமைச்சர் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
3. பாரபட்சமின்றி, கல்விக்கான நிதி ஒதுக்கீடை ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்கிட வேண்டும்..
4. மாநிலங்களின் சுய சார்பான கல்விக் கொள்கையை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும்.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது. கல்வியானது ஒத்திசைவு பட்டியலில் இருக்கும்போது ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை மாநிலம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான மும்மொழித் திட்டம் மாநிலங்களில் அமலாக்கம் செய்ய வேண்டும் என்பதை பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் முன் நிபந்தனை ஆக்கியதோடு தமிழகம் அதில் சேராததால் ஒன்றிய அரசானது நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைத்து, வேறு மாநிலங்களுக்கு மடைமாற்றுவது முற்றிலும் தமிழக மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டின் சுய சார்பான மாநில கல்விக் கொள்கைக்கும், எதிராக அமைகிறது. 2023- 24 ஆண்டில் 249 கோடியும், 2024 -25 கல்வியாண்டில் மொத்தமாக 2151 கோடியும் விடுவிக்கப்படாததால் பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய திட்டங்கள் தடைபட்டு நிற்கின்றன.
SSA திட்டத்திற்கான நிதியை முடக்கியதன் மூலம் தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலிருந்து, கல்வித் துறை சார்ந்த மாணவர் நலன் சார்ந்த வளர்ச்சி பணிகள் பல தடைபட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒன்றிய அரசின் கட்டளைக்கு அப்படியே கீழ்ப்படிந்து மாநிலங்கள் சுயசார்பை இழந்து ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மொழி என்ற அதிகாரத் திணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பது கூட்டாட்சிக்கு விரோதமானது. மொழி பன்மைத்துவத்திற்கும் எதிரானது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளையின் சார்பில் மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் கையெழுத்து இயக்கம் நடத்தி கோரிக்கை அனுப்ப இருக்கின்றோம். ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் இத்தகைய நிதி மறுப்பைத் தொடர்ந்தால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வி நலனுக்காக குரல் கொடுப்பார்கள்; போராட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.
முடிவில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட துணைத்தலைவர் சி.சுதாகர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment