Tuesday, 11 February 2025

தமிழகம் முழுவதிலும் ஊராட்சிகளில் நிரந்தர பணியாளர்கள் போலவே பணியாற்றி வரும் செயலர்கள்.. அரசு பணியாளர்கள் தேர்வாணையம் விதியை பின்பற்றுவதில்லை..?

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் ஊராட்சி செயலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊராட்சி செயலாளர்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடர்ந்து பல வருடங்களாக பணிபுரிவதை தடுக்கும் பொருட்டு பணி மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை பல வருடங்களாக ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில், 28 மாவட்டங்களிலுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்ததையடுத்து, அந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தினைக் கவனிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி அலுவலகங்கள் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசு அலுவலகங்களில் பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் தலையீடு அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு, புதிய மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது, கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது என அனைத்திலும் பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும், தங்களைக் கேட்காமல் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடுவதாக புகார் எழுந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க ஊராட்சி தலைவர்கள் இல்லாத நிலையில் ஊராட்சி பகுதிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் எனும் பிடிஓக்கல் மேற்பார்வையில் ஊராட்சி செயலர்களால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில ஊராட்சி செயலர்கள் பல வருடங்களாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர்கள் கிட்டத்தட்ட நிரந்தர பணியாளர்கள் போலவே பணியாற்றி வருகிறார்கள். பொதுவாக தமிழ்நாடு அரசு குடிமை பணி விதிகள் 17 (2) , மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகள் - 1975 இன்
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ ஊராட்சி செயலர்களை மாற்ற வேண்டும்.

ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல ஊராட்சி செயலர்கள் நீண்ட நாட்களாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது இதனையடுத்து அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு கடந்த டிசம்பர் மாதமே மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை கலந்தாய்வோ, பணியிட மாறுதலோ நடக்கவில்லை.

ஊராட்சி செயலாளர்களுக்கான பணிவிதிகள் நிர்ணயித்து வெளியிடப்பட்ட பார்வை 2-ல் குறிப்பிட்டுள்ள அரசாணையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக காரணங்களுக்காக வட்டார அளவில் மாறுதல் செய்யும் அதிகாரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் (கி.வா.), ஊராட்சி ஒன்றியங்களுக் கிடையேயான பணியிட மாறுதல் செய்யும் அதிகாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளருக்கும் (வளர்ச்சி), மாவட்ட மாறுதல் செய்யும் அதிகாரத்தினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அவர்களுக்கும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில்," தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கோரிக்கை மனுவினை பரிசீலனை செய்ததில், பின்வரும் காரணங்களுக்காக கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு, வட்டார அளவில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டியுள்ளது.

1. ஊராட்சி செயலாளர்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதை மாற்றியமைத்தல், 2. ஊராட்சி செயலாளர் முதுநிலை மற்றும் நிர்வாக அனுபவத்திற்கு ஏற்ப கிராம ஊராட்சிகளில் பணியமர்த்துதல்

3. வயது மற்றும் உடல்நலம் சார்ந்த அடிப்படையில் கிராம ஊராட்சிகளை ஒதுக்கீடு செய்தல், 4. களஅளவில் மாறுபட்டுள்ள வெவ்வேறு வஊராட்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு பெறுவதால் ஊராட்சி செயலாளர்களின் திறன் மேம்பாடு அடைதல்

5. கிராம ஊராட்சியில் உள்ள பணிகளுக்கு ஏற்ப தகுதியான ஊராட்சி செயலாளர்களை பணியமர்த்துதல்

6. நிர்வாக நலன் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குதல் ஆகியவை இருக்க வேண்டுமென கூறப்பட்ட நிலையில், இது இன்னும் நிறைவேற்றவில்லை. இதனால் பல ஊராட்சிகள் செயலாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...