Wednesday, 26 February 2025

கே. வி. குப்பத்தில் தலைக்கு ஏறிய மது போதையால் ரகலையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஜெயிலில் அடைப்பு!

"டிரஸ் போட மாட்டேன்’ - தலைக்கு ஏறிய போதைப் போலீஸ்காரரின் நிர்வாண அட்டூழியம்.. வேலூரில் நடந்தது என்ன?                                               

வேலூர் மாவட்டக் காவல் நிலையத்தில், பெண் போலீஸாரின் முன்பே உடைகளை கழற்றி வீசிவிட்டு நிர்வாணமாக நின்றுகொண்டு ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷு கம்பெனி வேன் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.

கே.வி.குப்பம் அருகிலுள்ள நீலகண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் வேனை ஓட்டிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. பி.கே.புரம் அருகே சென்றபோது, எதிரே பைக்கில் வந்த போதை ஆசாமி திடீரென வேனை மறித்து நடுரோட்டில் இறங்கி தகராறில் ஈடுபட்டார். தன்னை `போலீஸ்’ எனக் கூறிக்கொண்ட அந்த போதை ஆசாமி, வேன் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டிப் பேசி தாக்கவும் முயன்றிருக்கிறார். மேலும் விடாமல், வேன் ஓட்டுநரைப் பிடித்து கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கிருந்த போலீஸாரிடம், `என்மேல மோதுற மாதிரி வேன் ஓட்டிக்கிட்டு வந்தான். இவன் மேலயும், வேன் மேலயும் கேஸ் போடுங்க...’ எனக் கூச்சலிட்டு ரகளை ஈடுபட்டாராம் அந்த போலீஸ்காரர்.                                                
விசாரணையில் அந்த போதை ஆசாமியின் பெயர் அருண்கண்மணி என்பதும், காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. `வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை’ எனவும் தெரியவந்ததையடுத்து,  போதையிலிருந்த போலீஸ்காரர் அருண்கண்மணியை கே.வி.குப்பம் போலீஸார் எச்சரிக்கை செய்தனர்.

இதனால் கொதித்தெழுந்த போதைப் போலீஸ்காரர் தன்னுடைய உடைகளை திடீரென கழற்றி வீசிவிட்டு நிர்வாணமாக நின்றார். வேன் ஓட்டுநர் மீது எஃப்.ஐ.ஆர் போட்டால்தான் உடைகளை மீண்டும் அணிந்துகொள்வதாகவும் எல்லைமீறி அட்ராசிட்டிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் அருண்கண்மணி. இதனால் முக சுளிப்புக்குள்ளான பெண் போலீஸார் காவல் நிலையத்திலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தத்துக்கும் ஆளாகினர்.

கோபமடைந்த ஆண் போலீஸார், அந்த நிர்வாண போலீஸ்காரரை லாக்-அப்பில் தள்ளி, அவரின் செயல்களை வீடியோவாகவும் பதிவு செய்தனர். ``நேருக்குநேர் கூப்புட்டு விசாரணை பண்ணு. விட மாட்டேன். இந்த வீடியோ எஸ்.பி வரைக்கும் போகணும். ரைட்டரில் இருந்து என்னை அடிச்ச பஸ்காரனையும் எஸ்.பி விசாரிக்கணும்’’ என ஆவேசமாகக் கூறியதோடு, `டிரஸ் போட மாட்டேன்’ எனவும் லாக்-அப் கதவை பிடித்து வேகமாக ஆட்டி அட்டூழியம் செய்துகொண்டிருந்தார்.

இதையடுத்து, கே.வி.குப்பம் போலீஸார் ஒருவழியாக போராடி அருண்கண்மணிக்கு மீண்டும் உடை அணிவித்தனர். பிறகு மதுபோதைப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கேயும் பணியிலிருந்த அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டார் போதைப் போலீஸ்காரர் அருண்கண்மணி. மேலும், அருகிலிருந்த கண்ணாடிக் கதவையும் கையால் குத்தி உடைத்தார். இதைப் பார்த்த நோயாளிகள் பதறியடித்துக் கொண்டு தூரமாக ஓடினர்.                    இவ்வளவுக்குப் பிறகும் பொறுமையை இழந்த கே.வி.குப்பம் போலீஸார், அருண்கண்மணி மீது 2 பிரிவினின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று இரவு கைது செய்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அருண்கண்மணி, பானிபூரி கடையில் பானிபூரி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றார். வியாபாரி பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அருண்கண்மணி `போலீஸ்காரன்கிட்டேயே காசு கேக்குறியா..?’ எனக் கொந்தளித்து அந்த வியாபாரியையும் தாக்கினார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரி, குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் அருண்கண்மணி மீது புகாரளித்தார். இந்த விவகாரம் மாவட்ட எஸ்.பி-யின் கவனத்துக்குச் சென்றதையடுத்து, அப்போது உடனடியாக `சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார் அருண்கண்மணி. மீண்டும் பணிக்குத் திரும்பிய நிலையில்தான் மீண்டும் ஒரு சர்ச்சையில் இப்படியொரு வில்லங்க விவகாரத்தில் சிக்கி சிறைக்குச் சென்றிருக்கிறார் மது போதை தலைக்கு எரிய போலீஸ்காரர் அருண்கண்மணி.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...