திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி காவல் நிலையத்தில், கணவன் முன்னிலையிலேயே ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்த காவல் ஆய்வாளருக்கு, 24 வருடம் கழித்து 10 வருடும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த விவசாய கூலித்தொழிலாளி.. திருட்டு வழக்கில் விசாரணைக்காக இவரையும், இவரது மனைவியையும், 20.2.2001ம் ஆண்டு செம்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் நள்ளிரவு அழைத்து சென்றனர்.
அப்போது போலீசார், கணவரின் முன்னிலையிலேயே அந்த பெண்ணின் உடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர்.. பிறகு, இருவரையும் லத்தியால் தாக்கி விசாரணை செய்ததாக தெரிகிறது. பிறகு மறுநாள் காலையில், கூப்பிடும்போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும் என்று இருவரையுமே போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனால் தம்பதி இருவரும் உச்சக்கட்ட அவமானமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.. ஒருகட்டத்தில் மனம் உடைந்த அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.. ஆனால் ஊர் மக்கள் அவரை காப்பாற்றிவிட்டனர்.
இதற்கு பிறகு சில நாட்கள் கழித்து, கணவர் விஷம் குடித்துவிட்டார்.. இதைப்பார்த்து பதறிய அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 25.02.2001ல் கணவர் இறந்துவிட்டார். இவரது மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி, காவலர்கள் வீர தேவர், சின்னதேவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் 40க்கும் மேற்பட்டோரிடம், திண்டுக்கல் உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.
தற்போது, வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீபா தீர்ப்பு அளித்துள்ளார்.. அதில், செம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ரங்கசாமி (வயது 77), போலீஸ்காரர்களாக இருந்த வீரதேவர் (வயது 68), சின்னதேவர் (வயது 69) ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
கடந்த 24 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், தண்டனைக்குரிய அந்த 3 பேருமே இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment