ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்து விட்டு மாணவ, மாணவிகள் கல்வி பயில வேண்டும் என்று காட்பாடி சன் பீம் பள்ளியில் நடந்த சன் பீம் டே நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சுரேஷ்பாபு அறிவுரை வழங்கினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி சன் பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சன் பீம் டே நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி தாளாளர் ஹரி கோபாலன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய வேலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சுரேஷ்பாபு கூறியதாவது :மாணவ, மாணவிகள் தேர்வுக்கு படிக்கும் போது வழக்கம் போல் எந்த நேரத்திற்கு படித்தோமோ அதே நேரத்தை கடைபிடித்து படிக்க வேண்டும். நேரத்தை கூட்டுவதோ குறைப்பதோ கூடாது. திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து பேசுங்கள். பின்னர் அதன்படி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே ஆகலாம். அத்துடன் சோஷியல் மீடியாவை தேவைக்கேற்ப உபயோகப்படுத்த வேண்டுமே தவிர தேவையற்ற உபயோகத்துக்கு அதை பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக அதில் கேம் விளையாடுவதை அறவே நிறுத்த வேண்டும். நான்கு பேர் சேர்ந்து விளையாடுவது அத்துடன் நேரத்தை செலவிடுவது போன்ற விரும்பத்தகாத செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று டியூஷன் வந்துவிட்டு அங்கும் விளையாடுவதை சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர். இது அடியோடு நிறுத்தப்பட வேண்டும். இது உங்களை அடிமையாக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பீம் டேவில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்களுக்கு அறிவுரை வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பெற நீங்கள் பாடுபட வேண்டும். அப்போதுதான் நான் சந்தோஷப்படுவேன். குறிப்பாக படிக்கும்போது ஆர்வத்துடனும், சந்தோஷத்துடனும் படிக்க வேண்டும். அத்துடன் இந்த துரித உணவு மற்றும் ஜங்க் ஃபுட் எனப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வீட்டில் அம்மா தயாரிக்கும் உணவுகளை மட்டுமே தேர்வு முடிவு வரை உட்கொள்ள வேண்டும். இந்த பள்ளி தொடர்ந்து 100% தேர்ச்சி பெற நான் மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக சன் பீம் என்றால் ஒரு பெயர் உள்ளது. அந்த பெயரை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள மாணவ, மாணவிகளாகிய நீங்கள் கடின உழைப்பை செலுத்தி இந்த பள்ளிக்கும் உங்களுக்கும் பெருமையை தேடிக் கொள்ள வேண்டும். குறிப்பாக தேர்வு நேரங்களில் எந்த விரும்பத்தகாத செயல்களையும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு தூக்கம் இன்றி பயில்வது உணவு உட்கொள்ளாமல் இருப்பது இது போன்ற விரும்பத்தகாத செயல்களை அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். கஷ்டப்படுவதற்கு பலன் கட்டாயம் கிடைக்கும். ஆதலால் நீங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளீர்கள். உங்களது தனித்திறமையை காண்பித்து பள்ளிக்கு பெருமையை பெற்றுத் தர வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார். தங்க பிரகாசம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment