Tuesday, 18 February 2025

நெல்லை ஆர்டிஓ ஆபீசில் கார் பதிவிற்கு கூகுள் பே மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற பிரேக் இன்ஸ்பெக்டர் : விஜிலென்ஸ் போலீசார் வலைவீசி தேடல்

தமிழ்நாட்டிலுள்ள அரசு துறைகளில், ஏராளமான பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு, வருவாய்த்துறை துறை ,வட்டாரப் போக்குவரத்து துறை விளங்குகிறது. எனவேதான் இந்த துறையில் லஞ்ச கையூட்டு புகார்கள், அதையொட்டிய கைது நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் பெருகி வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் லுத்தர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம்.. இவர் 2024 மார்ச் மாதம் இனோவா கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். பிறகு, திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிகமாக பதிவு செய்துள்ள நிலையில், நிரந்தர பதிவு வேண்டி கடந்த ஜனவரி 22ம் தேதியன்று, வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாளிடம் வாகன ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால், ஆய்வாளர் பெருமாள், காரை நிரந்தரமாக பதிவு செய்ய வேண்டுமானால், ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உங்களின் பதிவு வேலையை கச்சிதமாக செய்து தருகிறேன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் சுரேஷ் பாக்கியம் அங்கிருந்து கிளம்பி விட்டார். 

அதன் பிறகு, மீண்டும் கடந்த ஜனவரி 28ம் தேதியன்று, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று மோட்டார் வாகன ஆய்வாளரை சந்தித்துள்ளார் சுரேஷ் பாக்கியம். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள், அதே ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சுரேஷ் பாக்கியம் சொன்னதுமே, மனமிரங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் சரி லஞ்சத் தொகையை 15 ஆயிரம் ரூபாயாக பேரம் பேசி குறைத்தாராம். அப்போது சுரேஷ் பாக்கியம், தன்னிடம் ரூ.10 ஆயிரம் தான் இருக்கிறது என்றாராம்.

அதற்கு ஆய்வாளர், அப்படியானால், மீதத்தொகை ரூ.5000 மறுநாள் வரும்போது தர வேண்டும் என்று கூறினாராம், அத்துடன் இந்த 10000 பணத்தை, கூகுள் பே மூலம், ஒரு செல்போன் நம்பருக்கு அனுப்ப சொன்னாராம்.. சுரேஷ் பாக்கியமும், அவர் சொன்னபடியே, கூகுள் பே மூலம் அவர் சொன்ன அந்த செல்போனுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் வாகன ஆர்சி புத்தகத்தை விடுவிப்பேன் என்று ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்  மோட்டார் வாகன பெருமாள்.

ஆனால், மறுநாளே ரூ.5 ஆயிரம் புரட்ட முடியாமல் திணறிய அந்த வாகன ஓட்டுனர் சுரேஷ் பாக்கியம், கஷ்டப்பட்டு வாங்கிய காருக்கு, எதற்காக லஞ்சம் தர வேண்டும் என்று நினைத்து, அந்த பகவான் பெருமாள் அனைவருக்கும் படி அளக்கிறான் ஆனால் இந்த மோட்டார் வாகன ஆய்வாளரோ நம்மிடம் பணத்தைக் கற்கிறார் என்று நினைத்துக் கொண்ட வாகன ஓட்டுநர் சுரேஷ் பாக்கியம் லஞ்ச ஒழிப்பு போலீசில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாளை சிக்க வைக்க திட்டம் தீட்டியிருக்கிறார். பின்னர் இதுகுறித்து நெல்லை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்பேரில், வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் அதற்குள் பெருமாளுக்கு தெரிந்து, ஒரு வாரமாக பணிக்கு திரும்ப வில்லையாம் எப்படியிருந்தாலும் அவர் அலுவலகத்துக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதால், போலீசார் அவரிடம் விசாரிக்க காத்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...