Tuesday, 11 February 2025

காரைக்குடியில் விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக புகார் கூறிய பெண் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் உதவி ஆய்வாளர் பிரணிதா. கடந்த 5-ந் தேதியன்று இரவில் அவர் காவல் நிலையத்தில் பணியிலிருந்தபோது, தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி இளைய கவுதமன் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக புகார் கூறியிருந்தார். ஆனால் அது பொய்யான புகார் என்று விளக்கம் அளித்த காவல்துறை உயர் அதிகாரிகள், தற்போது காவல் உதவி ஆய்வாளர் பிரணிதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இதுபற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு விளக்கம் அளித்த காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்," 07.02.2025 இளையகௌதமன் உட்பட சிலர் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தாக்கியதாக W.SI பிரணிதா கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு செய்தி பரவி வருகிறது.

இது தொடர்பாக, சார்பு ஆய்வாளர் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், காவல் நிலையத்தின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மேலும் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என தெரிய வருகிறது.

கடந்த 05.02.2025 அன்று மாலை, அமராவதிபுதூர் கிராமத்திலுள்ள கோயில் நிலத் தகராறு தொடர்பாக இரு பிரிவினர் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தனர். அது குறித்து காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் விசாரணை மேற்கொண்டார்.
அந்த நேரத்தில், வாகன சோதனைக்குப் பிறகு WSI பிரணிதா நிலையத்திற்கு வந்து, மேற்படி காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணனின் விசாரணையில் தலையிட்டார். விசாரணைக்கு வந்திருந்த ஒரு பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, மேலும் WSI. பிரணிதாவிற்கும், கிராமத்தினருடன் வந்திருந்த அமராவதிபுதூரைச் சேர்ந்த இளையகௌதமன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு வந்திருந்த கிராமத்தினர் கலைந்து சென்றனர். சார்பு ஆய்வாளர் ஒரு தனியார் மருத்துவமனையிலும், தொடர்ந்து காரைக்குடி மருத்துவமனையிலும் 10 பேர் அவரைத் தாக்கியதாகக் கூறி சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கிருந்த மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உள்நோயாளியாக அனுமதிக்கத் தேவையில்லை என்றும் கூறினார். இருப்பினும், அவர் மறுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அதே நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பத்திரிகைகளுக்கு இது தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்பது தெரியவருகிறது.


முன்னதாக, இந்த WSI.பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், கடந்த 18.11.2024ம் தேதி நிர்வாக குற்றச்சாட்டு காரணமாக, அவர் சோமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டார். இருப்பினும், அவர் தனது பணிமாறுதல் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு பணிக்கு அறிக்கை செய்யாமல் 30.11.2024 முதல் 16.01.2025 வரை 48 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தவர், தொடர்ந்து சோமநாதபுரம் காவல் நிலையத்திலேயே பணிபுரிந்து வருகிறார்.

முன்னதாக புகார் குறித்து காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர், காவல் நிலையத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தவறானது என்று சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது. இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார், ஐபிஎஸ்., உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...