செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அருண்ராஜ், மருத்துவர் கௌசிகா ஆகியோரது திருமணம் திருப்போரூர் முருகன் கோவிலில் மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. 10.02.2025 அன்று கோவிலில் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளராக அருண் ராஜ், ஐஏஎஸ்., பணியாற்றி வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சமுத்திர பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் மேகநாதன் ஜெயந்தி தம்பதியரின் மகளான மருத்துவர் கௌசிகாவுக்கும் 2 மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் அருண்ராஜ் கௌசிகா ஆகியோரது திருமணம் நடைபெற்றது. 10.02.2025 அன்று காலை ஆறரை - ஏழரை முகூர்த்தத்தில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி கோவிலிலுள்ள உற்சவ மண்டபத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
திருப்போரூர் முருகன் கோவில் அர்ச்சகர்களே இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த திருமண விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
மாவட்ட ஆட்சியாளர் என்றாலும் முருகன் கோவிலில் மிக எளிமையாக இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் பலரும் அதனை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட மக்களும் மாவட்ட ஆட்சியாளரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அருண்ராஜ் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தின் மூன்றாவது ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியாளராகவும், பழனியில் சார் ஆட்சியாளராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து நிதி துறையிலும், அதற்குப் பிறகு எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளராக தற்போது பணியாற்றி வருகிறார். எவ்வித பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல் முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அருண்ராஜ், ஐஏஎஸ்., என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment