தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பையை தரம் பிரிப்பதில் ரூ.14 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக, தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில், மாநகரின் 51 வார்டுகளில் சேகரமாகும் குப்பையை கொட்டி, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது. குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் குப்பையைத் தரம் பிரிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அப்போது, குப்பையை முறையாக தரம் பிரிக்காததுடன், அந்த நிதியில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.இதையடுத்து, தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராகப் பணியாற்றிய ஜானகி ரவீந்திரன், கா.சரவணகுமார் ஆகியோரை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு செய்தனர். முதல்கட்டமாக தற்போது தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக உள்ள சரவணகுமாரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று தஞ்சாவூருக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியதாவது: தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் குப்பையை தரம் பிரிக்காமல், அந்த நிதியில் ரூ.14 கோடிக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு, அண்ணா பல்கலைக்கழக ஆய்வறிக்கையின் மூலமாகவும் தெரியவந்தது. இதையடுத்து, திட்டம் அமலில் இருந்த காலத்தில் மாநகராட்சியில் ஆணையராக இருந்த ஜானகி ரவீந்திரன், சரவணகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, கா.சரவணக்குமாரை வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. வரும் 26-ம் தேதி விசாரணைக்கு வருமாறு ஜானகி ரவீந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment