தனக்கு பிடிக்காத நபரை கொல்வதற்காக சூனியம் வைக்க மாந்திரீயருக்கு ரூபாய் 21 லட்சம் கொடுத்துள்ளார் பெரம்பலூரைச் சேர்ந்த நபர் ஒருவர். இப்போது, அந்த நபரும், பணம் பெற்ற மாந்திரீகரும் ஜெயில் கம்பிகளை எண்ணி வருகின்றனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ரகு. இவர் சென்னையில் தங்கியிருந்து மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார். மேலும், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் மாந்திரீகம் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இதன் மூலம் பலருக்கும் அறிமுகமாகி, மாந்திரீகத் தொழிலை விரிவு படுத்தி வந்துள்ளார். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடமும் கூகுள் பே மூலம் பணம் பெற்று மாந்திரீகம் செய்து வந்துள்ளார். தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு சூனியம், செய்வினை வைப்பதற்கும் பலர் மோதிகர் மாந்திரீகர் ரகுவை அணுகியுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சிபி என்ற முரசொலி மாறன் என்பவரை மாந்திரீகம் மூலம் கொல்வதற்காக ரகுவிற்கு, சுமார் ரூ. 21 லட்சம் வரை கூகுள் பே மூலமாக பணம் அனுப்பி உள்ளார்.
தன்னைக் கொல்வதற்கு ரமேஷ் கிருஷ்ணா, ரகு என்ற மந்திரவாதிக்கு பணம் கொடுத்தது பற்றி தகவல் அறிந்த சிபி, பெரம்பலூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், ரமேஷ் கிருஷ்ணா மற்றும் ரகுவை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்வதற்காக சூனியம் வைக்க ரூபாய் 21 லட்சம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களிடையே நிலவி வரும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பல் எல்லா இடங்களிலும் உள்ளது. அப்படி ஒரு நபரிடம் 21 லட்சம் ரூபாயை கறந்த மாந்திரீககளையும், பணம் கொடுத்தவரும் இப்போ சிறையில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment