இன்றைய இளைய தலைமுறை என்னை அப்பா எனக் கூறுவது ஆனந்தமாக இருக்கிறது என் பொறுப்பை கூட்டியுள்ளது என்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்து இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தருவதில்லை. தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் வாசிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய வீடியோ இன்று வெளியானது. இந்த வீடியோவில் பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார். டெல்லி தேர்தல் தோல்வி, கூட்டணி கட்சிகளின் கருத்து வேறுபாடுகள், மத்திய பட்ஜெட், அற்ப சிந்தனை என்று மத்திய அமைச்சர் பேசியது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஸ்டாலின் பேசியதை இங்கு பார்க்கலாம்.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சி வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 'தலைவர், முதலமைச்சர், இப்போது அப்பா என்று சொல்வது' பற்றி பேசிய ஸ்டாலின், கட்சிக்காரர்கள் இயக்கத்துக்கு தலைவர் என்பதால் தலைவர் என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால் முதலமைச்சர் என்று அழைக்கிறார்கள். இப்போது இருக்கின்ற இளைய தலைமுறையினர் என்னை அப்பா என்று அழைக்கும் போது ரொம்ப ஆனந்தமாக இருக்கிறது. அப்பா என்ற உறவு எப்போதும் மாறாது. இந்த உறவு என்னுடைய பொறுப்புகளை கூட்டியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இன்னும் நான் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
மத்திய பட்ஜெட் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்து இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தருவதில்லை. தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் வாசிக்கப்படுவதில்லை. மத்திய அரசு வெளியிடுகிற எல்லா புள்ளி விவரங்களிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் நிதி மட்டும் தரமாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள்.
மாநில அரசு நிதியை வைத்தே திட்டங்களை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை வைத்து மட்டும் எப்படி சிறப்பாக செயல்பட முடியும். மத்திய அரசும் தந்தால் தானே திட்டங்களை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். கல்விக்கு இவ்வளவு நாட்களாக கொடுத்துக்கொண்டிருந்த நிதியை நிறுத்தினால் என்ன செய்வது. இப்படி ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டு இருக்கிறது. நாமும் தினமும் போராடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய உரிமையை கேட்பதையே அற்ப சிந்தனை என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். ஒன்றிய அரசில் இருப்பவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? என்று சிந்திக்க வைக்கிறது.
பெண்களுக்கான கல்வி பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. ஒருத்தரின் கல்வி அவர்களுடைய தலைமுறையையே மாற்றும் என்று நான் மாணவர்களிடையே தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால் தான் காலை உணவு திட்டம், இல்லம் தேதி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் என நிறைய திட்டங்களை செய்து வருகிறோம். பெண்களுக்கு என்று சிறப்பான திட்டங்களையும் செய்து வருகிறோம். கல்விக்காக இன்னும் நிறைய திட்டங்களை செய்வேன்.
கூட்டணி கட்சிகளின் கருத்து வேறுபாடுகள் பற்றி பேசிய ஸ்டாலின், வீட்டில், வேலை செய்ற ஆபிசில் என எல்லா இடத்திலேயும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம் தான். 2009 இல் இருந்து ஒன்றாக சேர்ந்து தேர்தல் களத்தை சந்தித்து வருகிறோம். பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணி தான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்பு கூட்டணியில் எந்த பாதிப்பு இல்லை.
No comments:
Post a Comment