Sunday, 23 February 2025

தமிழ்நாட்டின் தாது மணல் கொள்ளை விவகாரத்தில் 2013-ல் ஜெயலலிதா அரசு தடை விதிப்பு.. CBI பிடியில் தென் தமிழக தாது மணல் கொள்ளையர்கள்!

தென் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறந்த தாது மணல் கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்களின் இறுதி அத்தியாயத்தை உறுதி செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு. தமிழ்நாடு அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமாக தாது மணலை கொள்ளையடித்து ஏற்றுமதி செய்த மணல் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.5,800 கோடி வசூலிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தென் தமிழ்நாட்டில் அரியவகை தாது மணலை சட்டவிரோதமாக கடத்தி மணல் சாம்ராஜ்யங்களையே உருவாக்கின விவி மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள். இந்த நிறுவனங்களுக்கு முடிவுரை எழுதி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தாது மணல் கொள்ளை நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 2013-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் இது தொடர்பான விரிவான அறிக்கையை அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆலோசனை நடத்திய  முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ்., தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்தினார். இந்த குழுவின் பல்வேறு கட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தாது மணல் அள்ளுவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் தமிழ்நாடு அரசு சிறப்புக் குழு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் 2015-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்டர் ராஜமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விவி மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல்ஸ் ஆகிய நிறுவனங்கள் சட்டவிரோதமாக தாது மணல் எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்துவதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் பெஞ்ச் விசாரித்தது. இந்த பெஞ்ச் முன்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், 2013-ல் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்த தடைக்கு முன்னரும் தடைக்குப் பின்னரும் முறைகேடாக- சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தாது மணல் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ5,832 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சிறப்புக் குழுவான ககன்தீப் சிங் பேடியின் அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், விவி மினரல்ஸ் உட்பட 6 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அத்துடன் ரூ.5,800 கோடியை இந்த நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்திருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் விவி மினரல்ஸ் நிறுவனம் ரூ.2,295 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டிருந்தார்.

2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

- தாது மணலை அள்ளவும் ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும்.

- தாது மணல் கொள்ளை வழக்கை இனி சிபிஐ விசாரிக்கும்

- தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐ, சிறப்பு அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும்

-தாது மணல் கொள்ளை முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

- அனைத்து தாது மணல் குடோன்களையும் கைப்பற்றி சீல் வைக்க வேண்டும்

- தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து ரூ.5,832 கோடியை வசூலிக்க வேண்டும்.







No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...