வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் பனமடங்கி, பள்ளத்தூர், லத்தேரி சந்திப்பு சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை பழுதாகிவுள்ளது. இதனால் இந்த சாலை பல்லாங்குழி சாலையாக உருமாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறி வரும் நிலை அன்றாடம் தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக உடல் நலம் சரியில்லாதவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வயதானவர்களை அழைத்துச் செல்லும்போதும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதேபோன்று பள்ளி, கல்லூரி மற்றும் பல வேலைகளுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த சாலையை கடக்க மூச்சை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த நிலை இதுநாள் வரை மாற்றப்படாமல் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. புதியதாக வாகனங்களை இயக்குவோர், புதியதாக வாகனங்களை ஓட்ட கற்றுக்கொள்வோர் மற்றும் வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், மிதி வண்டியில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், சிறு, சிறு, காயங்களுடன் விபத்துகளை சந்தித்து, மிகவும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். லத்தேரி இந்திரா நகர் குடியிருப்பு பகுதி சாலையிலிருந்து ஹெச்பி பெட்ரோல் பங்க் ஆஞ்சநேயர் கோயில் வரை 5 இடங்களில் சாலை பழுதாகி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது. சாலை பழுதால் இப்பகுதியில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை, நெடுஞ்சாலைத்துறை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்து தருமாறு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை மற்றும் வேண்டுகோளை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை உடனடியாக சாலையை சரி செய்து தருமா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்கு போல கண்டும் காணாமல் விட்டுவிட்டு அமைதி காக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment