அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் ஒரு சில அதிகாரிகளால் ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுகிறது. வருவாய்த்துறை, பதிவுத்துறை , வட்டாரப் போக்குவரத்து துறை , உள்ளாட்சி, பொதுப்பணி, நீர்ப்பாசனம், நெடுஞ்சாலை, மின் வாரியம், போலீஸ், தீயணைப்பு என எல்லா துறைகளிலும் பாகுபாடின்றி லஞ்சம் ஊடுருவி கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் லஞ்ச கையூட்டு வாங்கிய வழக்குகளில், அதிகபட்சமாக 2023 - 24ல் 155 வழக்குகளை போலீசார் விசாரிக்கின்றனர். அதிலும் அதிகபட்சமாக வருவாய் துறையினர் மீதுதான் லஞ்சம் வாங்கியதாக 70 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வேப்பனஹள்ளி அருகே, பட்டா மாறுதலுக்கு லஞ்ச கையூட்டு வாங்கிய நில அளவையர், அவரது உதவியாளர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த பூதிமுட்லுவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், தன் அத்தை கெம்பம்மாவிற்கு பாகமாக கிடைத்த, 4 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் உட்பிரிவு செய்ய வேண்டி அனைத்து ஆவணங்களையும் வைத்து அரசுக்கு முறையாக பணம் செலுத்தி அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தார். நீண்ட நாட்கள் ஆகியும், பட்டா மாறுதல் உட்பிரிவு செய்யப்படவில்லை. பணியை விரைந்து முடிக்க, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் நில அளவைப் பிரிவில் சர்வேராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த, வேப்பனஹள்ளி பிர்கா நில அளவையர் ஜெயகாந்தனை அணுகியுள்ளார். அப்போது அவர் மனுதாரரான சுரேஷிடம், 4,000 ரூபாய் கையூட்டுக் கொடுத்தால் உங்களின் பட்டா உட்பிரிவு மனுவினை வட்டாட்சியருக்கு பரிந்துரைத்து பட்டா பெற்று தருகிறேன் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில், இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜனிடம் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் பொடி தடவிய, 4,000 ரூபாயை புகார்தாரரான சுரேஷிடம் கொடுத்து அனுப்பினர். இதனையடுத்து, நேற்று மாலை, வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சுரேஷ் சென்றார். அங்கிருந்த நில அளவையர் ஜெயகாந்த்(வயது 29), லஞ்சப் பணத்தை வாங்கி, தன் உதவியாளர் திலீப்குமார்(வயது 29), என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரையும் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். லஞ்சம் பெற்று இருவர் கைதாகிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
அத்துடன் கைது செய்யப்பட்ட இருவர் மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் டாக்டர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைத்தனர்.
No comments:
Post a Comment