கள்ளக்குறிச்சியில் பெண் விஏஓவை சிறைவைத்த சம்பவத்தினால், கிராம உதவியாளர் சங்கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த கோபத்தில் மீண்டும் விஏஓ மீது, கொடூரமான தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிர்ச்சியில் உள்ளது. என்னதான் நடந்தது?
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சங்கீதா.
சங்கீதா அதே ஊர் என்பதாலும், ஆளும் கட்சியின் பின்னணியைக் கொண்டவர் என்பதாலும் அலுவலகத்துக்கு சரியாக வருவதில்லையாம்.. விஏஓ என்ற முறையில் தமிழரசி அது குறித்து சங்கீதாவிடம் கேட்டுள்ளார். அப்போதிருந்து இவர்களுக்கு இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதை மையப்படுத்தியே, கடந்த 2024 டிசம்பர் 16-ம் தேதி மாலை, விஏஓ தமிழரசியை அலுவலகத்துக்குள் வைத்து, பூட்டிவிட்டார் சங்கீதா.
இந்த சம்பவம் வீடியோவாகவும் இணையத்தில் வைரலானதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார் சங்கீதா. இதனால், தமிழரசி மீது இன்னும் அதிகமான கோபம் கொண்டார். இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த வாரத்தில் வழக்கம்போல் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு வந்த தமிழரசி, பணியில் இருந்துள்ளார்.. அப்போது திடீரென உள்ளே நுழைந்த சங்கீதா, தமிழரசியை பார்த்ததுமே தகாத கெட்ட வார்த்தைகளில் திட்டினாராம்.
பிறகு, தமிழரசி மீது கரைத்து மறைத்து வைத்த மாட்டு சாணத்தை ஊற்றிவிட்டு, "என்னுடைய ஊர்ல இருந்துட்டே, எனக்கு எதிரா புகார் தர்றதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம? என்னை பகைச்சிக்கிட்டு என் ஊர்லயே நீ வேலை செய்வியா?" என்று கேட்டு, விஏஓ தமிழரசியின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி, அடித்து உதைத்துள்ளார்.
இதைப்பார்த்து பதறிப்போன அங்கிருந்த பொதுமக்கள், விரைந்து சென்று சங்கீதாவிடமிருந்து தமிழரசியை மீட்டுள்ளனர். இதற்கு பிறகே, ஊர்மக்களின் உதவியுடன் கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார் தமிழரசி. பிறகு, சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பெண் கிராம நிர்வாக அதிகாரி தமிழரசியை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசி, " சம்பவத்தன்று காலை 11.30 மணிக்கு நான் கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலையில் இருந்தபோது, அங்கு வந்த சங்கீதா, அலுவலகப் பின்பக்க கதவை மூடினார். அவர் கையில் ஏதோ பிளாஸ்டிக் பை இருந்தது.. உடனே அந்த பைக்குள் கையைவிட்டு, சாணியை எடுத்து என் முகத்துல அடிச்சார்.. அதில் நான் தடுமாறியதும், உடனே என்னோட துப்பட்டாவை பறித்து, என்னை கீழே தள்ளி தலைமுடியைப் பிடிச்சு அடித்தார்.
என்னை காப்பாத்துங்க... காப்பாத்துங்க. கொல்றாங்கன்னு கத்தினேன். அதுக்கு சங்கீதா, "இது என்னோட ஊருடி. நீ எப்படி இங்க வேலை செய்றனு பாத்துடறேன். உன்னை யாரு காப்பாத்துவாங்கனு பாத்துடறேன். உன்னை சாகடிக்காம விட மாட்டேன்" என்று கத்திக்கிட்டே அடிச்சிக்கிட்டே இருந்தார்" என்று கதறி அழுதார்.
இதனிடையே, கிராம உதவியாளர் சங்கீதாவை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார் அதன்படி போலீசார் கிராம நிர்வாக உதவியாளர் சங்கீதாவை சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment