ராமநாதபுரத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.37 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பார்த்திபனை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர். லஞ்சத்துக்கு உடந்தையாக இருந்த இ-சேவை மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இ-சேவை மையம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஏரியா மாநகராட்சியா அல்லது கிராமமா என்பதை அறிந்து அதற்கு உரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தைப் பதிவு செய்து ரூ.60 கட்டணம் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கப்படும்.
அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே பகவதி மங்கலம் கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக, ஒருவர் அங்குள்ள இ-சேவை மையத்தில் அனைத்து ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பித்துள்ளார்.
அப்போது அந்த இ-சேவை மையத்தின் உரிமையாளர் தான் விஏஓ-விடம் பேசி பட்டா வாங்கி தருவதாக கூறியது அடுத்து, வி.ஏ.ஓ., பார்த்திபன் தனக்கு லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாறுதல் கிடைக்கும் என்று கூறியுள்ளார். முதலில் அதிக தொகை கேட்டவர், பேரம் பேசியதன் முடிவில் 37,000 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். லஞ்சப் பணத்தை, இ-சேவை மைய உரிமையாளரிடம் கொடுத்து விடும்படியும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மனுதாரர், இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுக்க மனுதாரர் கொண்டு சென்றார். அந்தப் பணத்தை இ-சேவை மைய உரிமையாளர் அகமது ஜாப்ரின் அலி வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும், லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பார்த்திபன் தப்பி தலைமுறைவாகி விட்டார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment