தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அதீத கனமழை பெய்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருவண்ணாமலையில் 16 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலம் அடித்துக் கொண்டு போன விவகாரம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் கட்டித் திறக்கப்பட்ட இந்தப் பாலத்தை இப்போது காணவில்லை என அந்த ஊர் மக்கள் தேடுகிறார்கள். இதனால் 15கிமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை அந்த ஊர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பற்றியும் வெள்ளச் சேதத்தை நேரில் ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசியது பற்றியும் மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கொந்தளித்துப் போய் பேசி இருக்கிறார். சவுதி அரேபியாபோல் கடுமையான சட்டங்கள் தேவை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கருப்பையா பேசுகையில், “விழுப்புரத்தில் பொன்முடி மீது வீசப்பட்ட சேறு அவருக்கு மட்டுமானதல்ல. இந்த ஆட்சியாளர்கள் மீது வீசப்பட்ட சேறு அது. ஒரு காலத்தில் நாதஸ்வரம், மேள தாளம் வைத்து அரசியல்வாதிகளை வரவேற்ற மக்கள் இன்றைக்குச் சேற்றை வாரி அடித்திருக்கிறார்கள். வருங்காலத்தில் சாணியைக் கூட எடுத்து அடிக்கலாம். அந்த நிலை நிச்சயம் ஒருநாள் வரும்.
மக்கள் இந்தளவுக்குக் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள் என்றால் அதன் பின்னால் ஏதேனும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். கட்டாயம் அதை அரசு கவனிக்க வேண்டும். சாத்தனூர் அணை வெறும் வெறும் 7 டிஎம்சிதான் கொள்ளளவு கொண்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறிய அணை அது. இந்த முறை கிட்டத்தட்ட 45 செமீட்டர் மழை பெய்துள்ளது. விழுப்புரத்தில் பெய்த மழை சென்னையில் பெய்திருந்தால் அவ்வளவுதான். என்ன நடந்திருக்கும்?
பொதுப் பணித்துறை அமைச்சராக துரைமுருகன் தான் இருக்கிறார். அவர் இதை எல்லாம் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை செய்திருக்கவேண்டும். அவர் கிட்டத்தட்ட காட்பாடியையே வளைத்துவிட்டார். அவருக்கு மக்களைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. விழுப்புரம் பொன்முடியின் மாவட்டம். எனவே அவர் நேரில் சென்றுள்ளார். அவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் தண்டனை வழங்கி இருக்கிறது. அவரது மனைவியின் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்ததால் அவருக்கும் சிறைவாசம் காத்திருக்கிறது. அவர் தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பொன்முடி குற்றமற்றவர் என நீதிமன்றம் சொல்லவில்லை. அப்படி இருந்தும் அவரை மீண்டும் அமைச்சராக்கி இருக்கிறது இந்த அரசு.
அவர் மீது பலவித குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மக்கள் அதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்தான் மக்களைப் பார்த்து ஓசியில் பேருந்தில் போகிறீர்கள் என்று பேசியவர். அவர் மீது சேற்றை வீசியதில் என்ன குற்றம் இருக்கிறது?” என்று பொங்கி இருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர் எ.வ.வேலு ஊரில் ஒரு தரைப்பாலம் இருக்கிறது. அது சாத்தனூர் அணைக்கு அருகிலேயே இருக்கிறது. குறைவாக நீர் வந்தால், பாலத்தின் அடியில் செல்லும். அதிக நீர் வந்தால் பாலத்தின் மீது செல்லும். ஆனால், இந்த மழைக்கு அந்தப் பாலமே அடித்துக் கொண்டு சென்றுள்ளது. இதைக் கட்டுவதற்காகப் பணத்தை நபார்டு வங்கி கொடுத்துள்ளது. இந்தக் கடனை மக்கள் வரிப் பணத்திலிருந்து திரும்பக் கட்டவேண்டும்.
இதைக் கட்டி மூன்று மாதங்கள்தான் ஆகின்றது. அதற்குள் பாலத்தை வெள்ளநீர் அடித்துக் கொண்டு போய் உள்ளது. அப்படி எனில் அந்தப் பொறியாளர் யார்? அதன் தரம் என்ன? இதில் சம்பந்தப்பட்ட மந்திரி யார்? இதைக் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? அவர் செலவு செய்த தொகை எவ்வளவு? இதை நீதிமன்றமே தாமே முன்வந்து விசாரிக்க வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். நம் நாட்டில் ஒரு வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் தவறு செய்தவனே செத்துப் போய்விடுவான். பிறகு அதை மூடிவிடுவார்கள். எத்தனை காலத்திற்கு இந்தக் கொடுமை? சட்டம் தண்டிக்கவில்லை எனில் மக்கள் தண்டிப்பார்கள். இப்போது சேற்றை வீசியதைப் போல இவர்களைக் கட்டி வைத்து அடிக்கும் காலம் வரவேண்டும். சவுதி அரேபியா போலக் கடுமையான தண்டனைகள் இந்தியாவில் வரவேண்டும்.
விளைநிலங்கள் மொத்தமாக மூழ்கிவிட்டன. விவசாயிகள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அரசு எவ்வளவு நிதி அறிவித்துள்ளது தெரியுமா? இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி என்றால் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு? கிட்டத்தட்ட 3500க்கும் கொஞ்சம் கூடுதலாக வரும். ஏக்கருக்கு 4 ஆயிரம் என்றால் மக்கள் விழித்துக்கொள்வார்கள். இரண்டரை ஏக்கருக்கு 17 ஆயிரம் என்றால் அதிக நிதியை அரசு அளித்துள்ளது என மக்கள் நம்புவார்கள். இது என்ன பித்தலாட்டம்? ஒரு ஏக்கருக்குப் பயிர் வைக்க 15 ஆயிரம் செலவாகிறது. அந்தக் காசையாவது தரவேண்டாமா?” என்று கொந்தளித்துப் போய் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment