Sunday, 22 December 2024

கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தாமல் தடுக்கும் தலைமை ஆசிரியை: கொதிப்பில் திமுகவினர், பெற்றோர்கள்!

வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தம் பிச்சனூர் கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துமாறு 22 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தலைமை ஆசிரியை கீதா செயல்பட்டு வருவதாக பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எம்எல்ஏ அமலு விஜயன், நகர்மன்றத் தலைவர் எஸ்.செளந்தரராஜன், முன்னாள் சேர்மன் த.புவியரசி மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து டிசம்பர் 21-ஆம் தேதி நடத்தப்படவிருந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கும் வகையில், அன்றைய தினம் தலைமை ஆசிரியை கீதா விடுப்பு எடுத்துச் சென்றதால், ஆளும் திமுகவினரே கொதிப்பில் உள்ளனர். குடியாத்தம் நகரின் இதயப் பகுதியான பிச்சனூரில் நெசவாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கங்கதாரசாமி மடாலயத் தெருவில் நகராட்சி ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. 1972ஆம் ஆண்டில் பிச்சனூரில் இதற்கான இடமும், கட்டடத்தையும் தெருவாசிகளே ஏற்படுத்தி நகராட்சிக்கும், கல்வித் துறைக்கும் ஒப்படைப்பு செய்தனர். இந்தப் பள்ளி பின்னர் 2000-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து, பட்டதாரிகளாகி பல்வேறு உயர்பொறுப்புகளில் இருக்கின்றனர். மத்திய, மாநில, தனியார் நிறுவனங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இருந்துவருகின்றனர். இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று 22 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். எட்டாம் வகுப்பு படித்து முடித்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்ல வேண்டும் எனில், தனியார் பள்ளிகளை நாடும் சூழல் உள்ளது. அங்கு பல்லாயிரம் ரூபாயை இழக்க வேண்டியுள்ளதால் பலரும் இடைநிற்றல் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இதுதவிர, நன்கொடைக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கும் நெசவாளர்கள் தள்ளப்படுகின்றனர். இந்தச் சூழலில் 2003-ஆம் ஆண்டு முதல் பள்ளியை உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். பங்களிப்புத் தொகையான ஒரு லட்சம் ரூபாயை 2015-இல் மக்கள் செலுத்தினர். இதுவரையில் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை 2006-11 திமுக ஆட்சியின்போது, குடியாத்தம் நகருக்கு வருகை தந்த அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக் குழுவினர் மு.க.ஸ்டாலினிடம் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி கருத்துரு அடங்கிய புத்தகத்தையும் அளித்துள்ளனர். அதிமுக ஆட்சியின்போது, 2012-இல் இந்தப் பள்ளிக்கு வருகை தந்த வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் மனு அளிக்கப்பட்டதாகவும், மூன்றாவது நாளே கல்வித் துறை அமைச்சராக மாறுதலாகியும், அவர் வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கு மைதான வசதி இல்லை என்ற காரணத்தைக் கூறி அரசு தட்டிக் கழிப்பதாக வேதனையுடன் கூறும் பெற்றோர்கள், அருகேயுள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை கல்வித் துறைக்கு வாடகை அடிப்படையில் அறநிலையத் துறை அளித்து பள்ளியைத் தரம் உயர்த்தலாமே என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், பள்ளியைத் தரம் உயர்த்தக் கோரி டிசம்பர் 2-ஆம் தேதி பிச்சனூர் காமராஜர் சிலை அருகே புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ், பள்ளியின் முன்னாள் கல்விக் குழுத் துணைத் தலைவர் கோ.ஜெயவேலு ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. முன்னதாக, போராட்டக் குழுவினர் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமியை சந்தித்து கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ் தலைமையில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்ற எம்.எல்.ஏ அமலு விஜயன் உடனடியாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து, பள்ளியைத் தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சருடனான சந்திப்பின்போது, கைத்தறிக் காவலன் ரமேஷ், சமூக ஆர்வலர் கோ.ஜெயவேலு மற்றும் சர்வக் கட்சியினரும் உடனிருந்தனர். ஆட்சியாளர்களிடம் நேரில் மனுக்கள், நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என்று போராடியும் நடவடிக்கை இல்லை என்று போராட்டக் குழுவினரின் மிகவும் வேதனையுடன் கூறுகின்றனர். இந்த நிலையில், டிசம்பர் 21-ஆம் தேதி பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்த குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக, எம்எல்ஏ அமலு விஜயன், நகராட்சி சேர்மன் எஸ்.செந்தரராஜன், முன்னாள் சேர்மன் த.புவியரசி, நகராட்சி கவுன்சிலர்கள் டி.பி.என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, அர்ச்சனா நவீன், கே.எம்.ஏகாம்பரம், எம்.செளந்தரராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து அழைப்பிதழ்களையும் தயார் செய்திருந்தனர் குழுவினர். இந்தக் கூட்டம் நடத்தினால், பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கும் பிரச்னை எழக்கூடும் என்றும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தனது செயல் வெளிப்பட்டுவிடும் என்றும் அச்சம் அடைந்த தலைமை ஆசிரியை கீதா அன்றைய தினம் விடுப்பு எடுத்துவிட்டு, வீட்டிலேயே இருந்துவிட்டார். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் எம்எல்ஏ தரப்பினரும், சேர்மன் தரப்பினரும், ஆளும் திமுகவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்று வட்டார கல்வி அலுவலரிடம் நகராட்சி கவுன்சிலர்கள் டி.பி.என்.கோவிந்தராஜ், அர்ச்சனா நவீன், கே.எம்.ஏகாம்பரம், சி.என்.பாபு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர். கங்காதரசாமி நடுநிலைப் பள்ளி தரம் உயர்ந்து உயர்நிலைப் பள்ளியானால், தனது பணி ஆசிரியையாகிவிடும் என்பதாலும் அல்லது வேறு பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்யப்படும் நிலை உருவாகிவிடும் என்பதாலும், தலைமை ஆசிரியை கீதா பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டுவருகிறார் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுதவிர தலைமை ஆசிரியை கீதா தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலரிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு சாதகமாகவும் இந்தப் பள்ளிக்கு தடைக்கல்லாகவும் இருந்துவருகிறார் என்றும் இதனால் கீதாவை வேறு பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் கோ.ஜெயவேலு மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், மேலாண்மைக் குழு சார்பில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை தேவை என்று சமூக ஆர்வலர் கைத்தறி காவலன் எஸ்.ரமேஷ் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு கடிதம் கொடுத்துள்ளார். அதுவரையில், எம்.ஏ., பி.எட். படித்துள்ள தனது மனைவி டி.தனலட்சுமியை பள்ளியில் தற்காலிகமாக சேவை மனப்பான்மையோடு ஊதியம் இல்லாம் பணியாற்ற அனுமதிப்பதாகவும், இதற்கு கல்வித் துறை தகுந்த அனுமதியை அளிக்க வேண்டும் எனவும் கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். 2024-25-ஆம் ஆண்டில் கங்காதாரசாமி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...