கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே நிவாரணம் வழங்குகின்றனர். அதுவும் முழு மாவட்டத்துக்கு வழங்கப்படுவது இல்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஒரு நியாயம் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு நியாயம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 பிச்சையா போடுகிறீர்கள்?'' என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளது. இந்த கட்சியின் தலைவரான வேல்முருகன் தற்போது கடலூர் மாவட்டம் பண்ரூட்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்திய பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த மழை வெள்ளத்தால் வேல்முருகன் அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக சட்டசபையிலும் அவர் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் மீண்டும் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக கடலூரில் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்தல் வரும்போது மட்டும் முக்கியத்துவம் தரப்படும் கூட்டணி தலைவர்கள் தற்போது ஒதுக்கப்படுகின்றனர். மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் வரும்போது எனக்கு தகவல் அளிக்கவில்லை. அமைச்சர்கள் எங்களிடம் பேசினால் கவுரவ குறைச்சல் ஏற்பட்டுவிடுமா?. தேர்தலின்போது அமைச்சர்கள் பேசுவர். தேர்தல் முடிந்ததும் அமைச்சரின் உதவியாளர்கள்தான் பேசுவார்கள்.
தமிழகத்தில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சரின் கவனத்திற்கு உண்மை தகவல்கள் செல்லவில்லை. அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது. கேள்வி கேட்டால் கூட்டணி கட்சி தலைவர்களை புறக்கணிப்பார்கள். தேர்தலின்போது மக்கள் எதிர்வினையாற்றுவார்கள். திமுக ஆட்சியிலும் கூட அதிகாரிகள் தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடதமிழகம் என்ன பாவம் செய்தது. தமிழகத்தில் பேரிடர் வரும் போதெல்லாம் கடலூர் பாதிக்கப்படுகிறது. சாத்தனூர் அணையை திறந்து விட்டதால் எனது தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே நிவாரணம் வழங்குகின்றனர். அதுவும் முழு மாவட்டத்துக்கு வழங்கப்படுவது இல்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஒரு நியாயம் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு நியாயம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 பிச்சையா போடுகிறீர்கள்?'' என்று கொந்தளித்தார்.
No comments:
Post a Comment