Sunday, 29 December 2024

யூனிஃபார்ம் மேல கை வைக்காதீங்க".. ஒரிஜினல் போலீசிடமே ஓவரா சவுண்டு போட்டு மாட்டிக்கிட்ட டூப்ளிகேட் போலீஸ்!

தாம்பரம் பகுதியில் காக்கி சீருடையில் இருந்த போலி போலீஸ், பான்பராக், குட்கா சோதனை என கடைகளில் வசூல் செய்துள்ளார். அந்த நபரை நிஜ போலீசார் சுற்றி வளைத்து பிடித்துச் சென்றனர். கைது செய்ய முயன்றபோதும், நிஜ போலீஸ் போலவே விரைப்பாகப் பேசி சீன் போட்டுள்ளார் அந்த நபர். நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றும் அந்த நபர், போலீஸ் வேஷம் போட்டு, கல்லா கட்டியுள்ளார்.

தாம்பரம் அடுத்த சங்கர் நகர் பகுதியிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசார் சிலர் வந்து சோதனை செய்து, வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்துச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், தாம்பரம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பெயரில் வேறு யாரோ வேலையைக் காட்டுவதாக சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் சங்கர் நகர் பகுதியில் போலீஸ் சீருடை அணிந்தவாறு ஒருவர் கடைகளுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஒரு கடையில் பதினைந்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டிக் கொண்டிருந்த போலி போலீசை ரோந்து வாகனத்தில் வந்த சங்கர் நகர் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர்.

அப்போதும் தம் கட்டிப் பேசியுள்ளார் அந்தப் போலி போலீஸ். எங்கள் கேம்ப் அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும் என அந்த நபர் நாடகமாடி உள்ளார். அவரை வண்டியில் ஏறுமாறு நிஜ போலீஸ் கூறியதற்கு, "யூனிஃபார்ம்ல கை வைக்காதீங்க.. கைய எடுங்க மொதல்ல" என விரைப்பாகவே பேசிக் கொண்டிருந்துள்ளார்.

ஆனாலும் அவர் போலி என தெரிந்து அதிரடியாக அவரைக் கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் ஆக நடித்து பணம் பறித்த அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் கைது செய்யப்பட்டவர் முரளி என்றும், (வயது 40) என்றும், ஸ்ரீபெரும்புதூர் வெங்காடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் காவலாளியாக இருப்பதும் தெரியவந்தது.

ஏற்கனவே கடை ஒன்றில் 15 ஆயிரம் ஏமாற்றி வாங்கிச் சென்றதாக ஒப்பு கொண்டதின் பேரில் அவர், மீது சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வணிகர்கள், கடை வியாபாரிகள், போலீஸ் என யாராவது சோதனை செய்தால் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...