Sunday, 15 December 2024

ஆதவ் அர்ஜுனா.. விசிகவில் இணைந்த 21 நாட்களில் பதவி.. 11 மாதங்களில் விசிகவில் இருந்து.. கனத்த இதயத்துடன் விலகுகிறேன்!

தமிழ்நாடு அரசியலில் கடந்த சில காலமாகவே தனது பேச்சுகள் மூலம் சலசலப்பை ஏற்படுத்தி வந்தவர் ஆதவ் அர்ஜுனா.. தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, விசகவில் இணைந்து ஓராண்டுக்குள் விலகியுள்ளார். ஆனால், இந்த ஓராண்டுக்குள் அவர் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார். யார் இந்த ஆதவ் அர்ஜுனா.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஆதவ் அர்ஜுனா கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர்.. ஆதவ் அர்ஜுனாவின் தாய் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதியின் சகோதரி ஆவர்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு 5 வயதாகும் போதே அவரது தாய் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர்களின் குடும்பத்திற்குப் பெரிய வருமானம் இல்லாமல் இருந்ததாகவும். இதனால் குடும்ப வன்முறையை எதிர்கொண்ட தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக ஆதவ் அர்ஜுனா ஒரு நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார். தாய் உயிரிழன்துவிட்டதால்.. உறவினர் ஒருவரின் பாதுகாப்பிலேயே ஆதவ் அர்ஜுனா வளர்க்கப்பட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்ஸி என்பவரை ஆதவ் அர்ஜுனா காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் கூடைப்பந்தில் ஆர்வமாக இருந்தார். இதனால் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இப்போது கூட இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார்.

விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் அரசியலிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2011 முதல் 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அப்போது நமக்கு நாமே என்ற பயணத்தை ஸ்டாலின் மேற்கொண்டார். அந்த பயணத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்களில் ஒருவராக ஆதவ் அர்ஜுனா இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு தேர்தல் வியூக வல்லுநர்களான பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் ஆகியோருடன் இணைந்து பயணித்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் திமுகவுக்காக அவர் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அதில் இருந்து விலகிய இவர். 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விசிகவுக்காக பணியாற்றத் தொடங்கினார். இந்தாண்டு தொடக்கத்தில் விசிக சார்பில் திருச்சியில் "வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டையும் ஒருங்கிணைத்தார்.

அந்த மாநாட்டில் தான் திருமாவளவன் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்தார். அதன் பிறகு வெறும் 21 நாட்களில் அவருக்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மக்களவைத் தொகுதித் தேர்தலிலும் கூட அவர் விசிக சார்பில் போட்டியிட இருந்தார். இதற்காகவே விசிக ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், பொதுத் தொகுதி கிடைக்காததால் அந்த தேர்தலில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடவில்லை.

அதேநேரம் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் திமுகவை விமர்சித்துப் பேசத் தொடங்கினார். குறிப்பாக விசிக கூட்டணி இல்லாமல் வட தமிழ்நாட்டில் திமுகவால் வெல்ல முடியாது என்றது பெரும் சர்ச்சையானது. சினிமாவில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர்கள் துணை முதல்வராகும் போது, 40 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் ஏன் துணை முதல்வராகக் கூடாது என்று இவர் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

அதைத் தொடர்ந்து நடந்தது தான் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி. அதில் 2026இல் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்.. பிறப்பின் அடிப்படையில் ஒருவர் முதல்வராகக் கூடாது என்றெல்லாம் பேசினார். அது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 

விசிகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா. கடந்த சில காலமாகவே இவரது பேச்சுக்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்புவதாக இருக்கிறது. சமீபத்தில் தான் அவரை 6 மாதம் விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார். இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் தான் விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதேநேரம் அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா எழுதியுள்ள கடிதத்தில், "நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன்.

சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.

இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்படையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.

அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்... வாய்மையே வெல்லும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.





No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...