Tuesday, 10 December 2024

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு வழக்கில் எடப்பாடியார் இன்று ஐகோர்ட்டில் ஆஜராகிறார்!

அறப்போர் இயக்கம் தெரிவித்த நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகாருக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் தமிழக அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே சாலைகள் நல்ல நிலையில் இருக்கும்போது, புதிதாக சாலை அமைப்பதாக கூறி பணத்தை மோசடி செய்ததாகவும், எடப்பாடி கே. பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் தலைமை செயலாளர், நெடுஞ்சாலைத் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார்.. எனவே, தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட ஈடுகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்ததுடன், தனக்கு 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அறப்போர் இயக்கத்திற்கு உத்தரவிடுமாறும் எடப்பாடி கேட்டுக் கொண்டார். இதன் விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசக் கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதாவது, பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடையும் விதிக்கப்பட்டது

இதுதொடர்பான மேல்முறையீட்டில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க இரண்டு நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக கடந்த நவம்பர் 19ம் தேதி எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் காலை ஆஜரானார்.

இந்த வழக்கு நீதிபதி மகாலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தரப்பில் சாட்சியம் அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமி டிசம்பர் 11 ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.








No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...