பட்டா மாறுதல் கேட்கும் அரசு ஊழியர்களை லஞ்சம் கேட்பதாக புகார் அளித்து வழக்கில் சிக்க வைத்து அவர்களை சஸ்பெண்ட் செய்ய வைக்க முடியும்.
அதேபோல் அவர்களை சிறையிலும் தள்ள முடியும். இந்த விவகாரத்தில் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பட்டா மாறுதல் செய்து கொடுத்ததற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் என்பவர் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவரது பட்டா மாறுதல் மனு மீது பெருந்துறை தாலுகா மண்டல துணை தாசில்தார் நல்லசாமி, பள்ளபாளையம் 'அ' கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் ஆகியோர் பட்டா மாறுதலுக்கான நடவடிக்கை எடுத்தனர். அப்போது பணி முடிந்ததும் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று மண்டல துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய 2 பேரும் பேரம் பேசியதாக சொல்லப்படுகிறது. அதற்கு தனசேகரனும் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளார். ஆனால், தனசேகரன் கூறியபடி லஞ்சப்பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனசேகரன், இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் அளித்தாராம்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி ராஜேஷ் ஆலோசனையின் பேரில், இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் அறிவுரைகளின் படி, தனசேகரன் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார், மண்டல துணை தாசில்தார் நல்லசாமி ஆகியோருக்கு பணம் கொடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும் பணத்தை, எங்கே கொண்டு வருவது என்றும் கேட்டார். அதற்கு அவர்கள் பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பணத்தை கொண்டு வரும்படி கூறினார்களாம்.
அதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்கு வந்த தனசேகரன், லஞ்சப்பணமாக ரூ.15 ஆயிரத்தை சரத்குமாரிடம் கொடுத்தார். அதை அவர் கையில் வாங்கியதும் அங்கிருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது துணை தாசில்தார் நல்லசாமியும் அங்கு வந்தார். தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment