Monday, 30 December 2024

மாமல்லபுரத்தில் வசிக்கும் நரிக்குறவர்களின் கனவு நிறைவானதா? 3 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வர் அளித்த வாக்குறுதி நிறைவேறியதா?

தமிழ்நாடு முதல்வரையும் நரிக்குறவர் மக்களையும் அதிகாரிகள் ஏமாற்றுகிறார்களா?

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆன போது, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

மாமல்லபுரம் ஸ்ரீதலசயனப்பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட அமர்ந்த நரிக்குறவ பெண்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 'அரசாங்க கோவில்ல ஒன்னா உட்கார்ந்து சாப்பிடக் கூடாதா?' என அவர்கள் பேசும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அரசின் மீதான விமர்சனமாக இது பார்க்கப்பட்டதால், நரிக்குறவ பெண் அஸ்வினியின் வீட்டுக்கு அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்தார்.

நரிக்குறவ மக்களின் வீடுகளில் தேநீர் அருந்தியதோடு, 283 பேருக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டு மனைப் பட்டா, சாதி சான்றிதழ்களை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

வீடில்லாத மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தர வேண்டும்' என அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ''போதிய அளவு வீடுகள் கட்டித்தரப்படவில்லை, அவ்வாறு கட்டப்பட்ட சில வீடுகளும் கதவுகள் இல்லாமல், மழை வந்தால் நீர் கசியும் கூரையுடன் பெயரளவுக்கு கட்டப்பட்டுள்ளது'' என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மாமல்லபுரம் நரிக்குறவர் மக்களின் வாழ்நிலை எப்படி உள்ளது?
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது பூஞ்சேரி கிராமம். இங்கு 80க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களும் இருபதுக்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்களும் வசித்து வருகின்றன.

சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் ஊசி, பாசிகளை விற்பது இவர்களின் முழுநேர தொழிலாக உள்ளது. 2021ஆம் ஆண்டு ஸ்டாலின் நேரில் வருகை தந்து வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், வீடில்லாத நரிக்குறவர் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகளைக் கட்டித் தருவதாகவும் அரசுத் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இருளர்கள் குடியிருப்பு பகுதியில் அரசு கட்டிக் கொடுத்த வீட்டின் முன்பு அமர்ந்திருந்த கன்னியம்மாள், தமிழ்நாடு சி.எம் வந்து பார்த்துட்டுப் போயிட்டார். எங்க இருளர் மக்கள் அஞ்சு பேருக்கு மட்டும் வீடுகளைக் கட்டிக் கொடுத்தாங்க. ஜன்னல் கூட வச்சாங்க. ஆனா கதவு வைக்கல. அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க என்று மனம் நொந்தபடி கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், "வீட்டுக்குள்ள தரை, சுவருன்னு எங்கயும் சிமெண்ட் பூச்சு பூசலை. வீட்டுக்கு மேல கான்கிரீட் போட்டாங்க. ஆனா மழை வந்தா ஒழுகுது. வீடு கட்டிக் கொடுத்து முழுசா இரண்டு வருஷம் கூட ஆகலை. மழை வந்தா வேற யாராவது வீட்டுல தான் போய் தங்கறோம்.

இதே கருத்தை தெரிவித்த வசந்தி என்ற பெண், "கான்கிரீட் சரியா போடாததால சுவத்துல தண்ணி ஊறுது. வீட்டுக்குள்ள உட்காரக்கூட முடியாது.

"முதலமைச்சர் வரும்போது எல்லா அதிகாரிகளும் இறங்கி வேலை பார்த்தாங்க. அதுக்குப் பிறகு யாரும் கண்டுக்கல..

முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி இப்பகுதியில் சில வீடுகளில் மட்டும் கழிப்பறையை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் கட்டிக் கொடுத்துள்ளது.

ஆனால், அந்தக் கழிப்பறைகள் எல்லாம் இடிந்தும் கதவுகள் உடைந்தும் சேதம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்.

எங்க மக்களுக்கு 22 வீடுகளைக் கட்டித் தரணும்னு கேட்டோம். ஆனா, 5 வீடுகளைத் தான் கட்டிக் கொடுத்திருக்காங்க. அந்த வீடுகளும் சரியில்லை. பழைய வீடுகள் எல்லாம் இடியிற நிலையில இருக்கு. அதையும் அதிகாரிகள் கண்டுக்கலை..

வீட்டுக்குக் கதவு இல்லாததால் பொம்பளைங்க துணி மாத்தக் கூட கஷ்டப்படறாங்க. கதவுக்குப் பதிலாக துணியைப் போட்டு மறைக்கறோம்.

"பாத்ரூம் சரியா கட்டிக் கொடுக்கலை. நிம்மதியா குளிக்க முடியலை. பாத்ரூம் கதவு சேதம் ஆயிருச்சு. யாரும் சரி பண்ணிக் கொடுக்கலை. ஆனா, எல்லாம் பண்ணிக் கொடுத்துட்டோம்னு சொல்றாங்க" என்கிறார் சுலோச்சனா.

இந்தப் பகுதியில் போதிய குடிநீர் மற்றும் சாக்கடைக் கால்வாய் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதைப் பார்க்க முடிந்தது.

சுற்றிலும் காட்டுப்பகுதியாக உள்ளதால கொசுத்தொல்லை அதிகம். குடிதண்ணீர் சரியில்லை. சேறு, சாக்கடை கலந்த நீர் தான் வருது. நல்ல தண்ணீர் கிடைத்தால் போதும்" என்கிறார் செல்வி..

நரிக்குறவர் மக்களுக்கு அரசு வீடுகளைக் கட்டிக் கொடுக்கலை. முதலமைச்சர் ஸ்டாலின் பட்டா, சாதி சான்று, ஆதார் கார்டு, ரேஷன் பொருள் ஸ்மார்ட் அட்டை எல்லாம் கொடுத்தார். ஆனா வீடு மட்டும் தரலை" என்கிறார் நரிக்குறவர் தெருவில் வசிக்கும் விஜயலட்சுமி.

ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வசிப்பதாக கூறிய விஜயலட்சுமி, "இருளர் மக்களுக்கு பாதரூம் கட்டிக் கொடுத்தாங்க. ஆனால் நரிக்குறவ மக்களில் பாதிப்பேருக்கு மேல பாத்ரூம் கட்டிக் கொடுக்கலை. அதுக்காக பள்ளத்தை மட்டும் தோண்டிட்டு விட்டுட்டுப் போயிட்டாங்க..  

வீட்டு மனைப்பட்டா தொடர்பாகவும் கடந்த 2021-ஆம் ஆண்டு பிரச்னை எழுந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களில் 11 பேருக்கு ஒன்றரை சென்ட் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. உள்ளூர் மக்களின் உரிமைக் கோரல்கள் காரணமாக அவற்றைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து நேரில் ஆய்வு நடத்திய அப்போதைய மாவட்ட ஆட்சியாளர் ராகுல் நாத், ஐஏஎஸ்., நரிக்குறவ மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி உத்தரவிட்டார். ஆனால் அந்த இடங்களிலும் அரசு சார்பில் வீடுகளைக் கட்டித் தரும் வேலைகள் தொடங்கப்படவில்லை.

வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நரிக்குறவர் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வீடுகளும் இப்ப சரியா இல்லை. ரொம்பவே சேதம் ஆயிருச்சு. இடம் இருக்கறவங்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்தால் பரவாயில்லை. வீடு கட்டிக் கொடுக்கறதா அதிகாரிகள் எழுதிட்டுப் போனாங்க. யாரும் வரவே இல்லை" என்கிறார், நரிக்குறவர் சமூகத்தின் ஊர் தலைவரான கன்னியப்பன்.

தமிழ்நாடு சி.எம் வந்தப்ப வேகம் வேகமாக வேலைகள் நடந்துச்சு. தண்ணீர் குழாய், ரோடு எல்லாம் கொண்டு வந்தாங்க. அதன்பிறகு எந்த வசதியும் வரலை. நாங்கள் போய் அதிகாரிகளிடம் பேசினால் மரியாதை கிடைக்கறதில்லை. எங்க மக்களும் கூட்டமா வந்து கேட்க மாட்டேங்கறாங்க. கழிப்பிட வசதி கூட இல்லை. வெளியிடங்களை தான் பயன்படுத்தறோம். பெண்களோட நிலைமை இன்னும் கஷ்டம்" என்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தங்கள் கிராமத்துக்கு வந்தபோது தங்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டதாக நரிக்குறவர் மற்றும் இருளர் மக்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், அவர்களுக்குப் போதுமான வசதிகள் எதுவும் வந்து சேரவில்லை. எனவே நரிக்குறவ மக்களின் கனவு நினைவாகுமா?.. நமக்கு நல்ல காலம் நல்லது நடந்து விடாதா என எதிர்நோக்கி காத்திருக்கும் நரிக்குறவ மக்கள்! 











No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...