Thursday, 12 December 2024

பல தேவைக்காக அரசு அதிகாரிகளிடம் மனு செய்த பின்.. யாராவது லஞ்சம் கேட்டால், அந்த அதிகாரிகள் மீது விஜிலன்ஸில் புகார் அளிப்பதுதான், லஞ்சம் பெறுவது குறையும்!

தமிழ்நாட்டில் இன்றைக்கு நீங்கள் நிலம் வாங்கினால் அல்லது இடம் வாங்கினால் உட்பிரிவுடன் கூடிய பட்டா இல்லை என்றால் தானாகவே பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிடும். ஆனால் முன்பு வாங்கிய நிலங்கள், உட்பிரிவுடன் கூடிய பட்டா என்றால் தனியாகவே வாங்க வேண்டியதிருக்கும். பொதுவாக இன்றைக்கு பட்டா வாங்க இ-சேவை மையத்தில் அரசுக்கு முறையாக பணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். உங்களிடம் விஏஓ, சர்வேயர், கிராம நிர்வாக உதவியாளர் ஆகியோர் லஞ்சம் கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

இன்றைக்கு வருவாய் துறையிலுள்ள சில அதிகாரிகள் பட்டா வாங்க, பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் அதீத அளவில் உள்ளது. என்னதான் இ-சேவை மையத்திற்கு சென்று அனைத்து ஆவணங்களையும் வைத்து விண்ணப்பித்தாலும், வேலை நடக்க வேண்டும் என்றால், கிராம நிர்வாக அதிகாரி, சர்வயேர், கிராம நிர்வாக உதவியாளரை கவனித்தால் மட்டுமே பைல், அடுத்தகட்டமாக ஆர்ஐக்கும், தாசில்தாருக்கும் செல்வதாக புகார்களை பொதுமக்கள் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில், எல்லா அரசு அலுவலகங்களில் இப்படியான நிலை என்றாலும், சில அரசு அலுவலகங்களில் ஒரு சிலருக்கு சேவைகளை பெறுவதற்கே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருப்பதாக பலர் புலம்புகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பத்திரப்பதிவு செய்து பட்டா வாங்க அலைவோர் தான்.  பத்திரப்பதிவு செய்த உடன் நிலத்தை அளக்க வரும் சில சர்வேயர்கள், இடைத்தரகர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்யும் சிலர், நிலத்தை அளந்து கொடுத்து பட்டா வாங்க கணிசமான பணம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இ-சேவை மையத்தில் நீங்கள் உங்கள் நிலத்திற்கு பட்டா வாங்க விண்ணப்பித்துவிட்டீர்கள் என்றால், அடுத்த சில நாட்களில் உங்கள் நிலத்தை அளக்க உங்கள் பகுதியின் பிற்கா சர்வேயர் தொலைபேசி எலோ அல்லது தனது உதவியாளர் மூலமாகவோ உங்களுக்கு இந்த தேதியில் நேரில் வந்து நிலத்தை பார்வையிடுவார் என்று அரசின் சார்பில் குறுஞ்செய்தி வாயிலாக  வரும். அதன்பிறகு உங்களிடம் விஏஓ, சர்வேயர் உள்ளிட்ட யாராது பட்டா பெறுவதற்கு லஞ்சம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? அரசின் குறுஞ்செய்தி படி உங்கள் நிலத்தை பார்வையிட வரும் சர்வேயர் அல்லது விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் யாராவது பணம் கேட்டால் பணம் கொடுக்க வேண்டாம். அவர்கள் பணம் கேட்பதை வீடியோவாகவோ அல்லது ஆடியோவாகவோ பதிவு செய்யுங்கள். பின்னர் இன்னொரு நாளில் தருவதாக வாக்குறுதி அளியுங்கள். பின்னர் அந்த ஆடியோ அல்லது வீடியோ பதிவுடன் நேராக உங்கள் மாவட்டத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள்.

நீங்கள் புகார் அளித்த உடனே, புகாரை பதிவு செய்யும் உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயணம் தடவிய நோட்டுகளை உங்களிடத்தில் தருவார்கள். அதன்பின்னர் உங்ளிடம் லஞ்சம் கேட்ட விஏஓ அல்லது சர்வேயர், கிராம உதவியாளர் உள்பட எந்த அரசு அதிகாரியாக இருந்தாலும் அவரை நேரில் சென்று பார்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி அவர்கள் வழங்கிய ரசாயன பொடி தடவிய லஞ்ச பணத்தை அந்த அரசு ஊழியரிடம் கொடுங்கள்.. அப்படி நீங்கள் பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக விஏஓ, சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக கையும் களவுமாக பிடிப்பார்கள்.

லஞ்சப்பணத்துடன் சிக்கும் விஏஓ, சர்வேயர் உள்பட அதிகாரிகள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது ஊழல் வழக்கின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் துறை ரீதியான நடவடிக்கைக்காக சஸ்பெண்ட் செய்வார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே உங்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைப்பது தான், லஞ்சத்தை ஒழிக்கவும், நேர்மையான நிர்வாகம் பிறக்கவும் ஒரே வழியாக உள்ளது.




No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...