பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு (நகர்ப்புறம்) திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டப்படி சொந்த வீடு இல்லாத, வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடு கட்டி தருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே வாடகை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் புதிய வீடு பெற்றதாக வாழ்த்து கடிதம் வந்துள்ளது. இதனால் அந்த பெண் அதிர்ந்து போனார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2015 ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்ற மலிவு விலை வீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது. வீடு இல்லாத பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. குறைந்த வருமானம் கொண்டவர்கள் (LIG), மற்றும் நடுத்தர வருமானம் உடையவர்கள் பயன்பெற்றார்கள். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது லட்சக்கணக்கானோரின் கனவாக இருந்து வரும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் பலரின் கனவுகள் நனவாகியிருக்கிறது. கோடிக்கணக்கானமக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் 2.0 திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டப்படி, குடிசைவாசிகள், எஸ்சி எஸ்டி மக்கள், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைஞர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட இரும்பு பாலம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நெல்லியாளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் இருந்து தபால் மூலம் மகேஸ்வரிக்கு கடிதம் வந்தது.
அதில், பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடு பெற்ற பயனாளிக்கு வாழ்த்துகள். இந்த திட்டம் தங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு வழங்குவது மட்டும் அல்லாமல் தங்களுக்கு சுய மரியாதையும், சமூகத்தில் முன்னேற்றத்தையும் கொடுக்க கூடிய வாழ்க்கையும் வழங்கி இருக்கிறது. நீங்கள் வீட்டினை சுத்தமாக வைக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பான குடிநீர், எரிசக்தி சேமிப்பு மற்றும் மரம் நடுவதில் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தபாலை பார்த்த தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகேஸ்வரி கூறுகையில். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் வீடு கட்டாமலேயே பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் வீடு பெற்றதாக தபால் வந்து உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment