Wednesday, 25 December 2024

சிவகங்கையில் காரில் சென்று 100 நாள் வேலை வழங்க வேண்டி நாதக தலைவர் சீமானின் தாயார் மக்களுக்காக கோரிக்கை வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் 100 நாள் வேலையை முறையாக வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் அன்னம்மாள் கோரிக்கை வைத்தார். மக்களுக்காக 100 நாள் வேலை கோரி அவர் காரில் சென்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள், ஆண்கள், முதியவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

கடந்த 2013-14-ம் நிதியாண்டில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான குறைந்தபட்ச சராசரி அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் ரூ. 155 ஆக இருந்தது. இந்த ஊதியம் தற்போது 2024-25-ம் நிதியாண்டில், ரூ. 279 ஆக அதிகரித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு திட்டத்தால் கடினமான வேலைக்கு செல்ல முடியாத கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் 100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் மனு கொடுத்துள்ளார். அதாவது சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் என்பதாகும். இங்கு சீமானின் தாய் அன்னம்மாள் வசித்து வருகிறார். இவர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் சீமானின் சொந்த ஊர் மக்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி என்பது சரியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரணையூரைச் சேர்ந்த மக்கள் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது சீமானின் தாய் அன்னம்மாளும் கிராம மக்களுடன் சென்றிருந்தார். அவர் போலிரோ காரில் சென்று மக்களுடன் மக்களாக நின்று 100 நாள் வேலை உறுதி திட்டத்தை முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. அதன்பிறகு மீண்பும் போலிரோ காரில் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அந்த காரின் முன்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த வேலையை அவர் வெட்டி வேலை என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி வேளாண் பணிகளை செய்ய ஆட்கள் இல்லை. விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிடும் வகையில் தான் இந்த திட்டம் உள்ளது.

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது. எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இப்படி பயன் இல்லாத திட்டங்கள் எதற்காக என்று கேட்ட சீமான், கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள்.

பெண்கள் பல்லாங்குழி ஆடுகிறார்கள். புரணி பேசுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் இல்லை என்ற நிலை உள்ளது என விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் அவரது தாய் அன்னம்மாள் 100 நாள் வேலையை முறையாக வழங்கும்படி மக்களோடு மக்களாக நின்று மனு செய்துள்ளார்.


No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...