திருப்பத்தூர் மாவட்டம், தண்டுக்கானூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி, விவசாய நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரிடம் நிலத்தை அளக்க கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சர்வேயரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
நிலம் வாங்குவோர், இடம் வாங்குவோர், வீட்டு மனை வாங்குவோர், வீடு வாங்குவோர் சந்திக்கும் பெரிய சிக்கல் எதில் என்றால் பட்டாவில் தான். பட்டா வாங்கவேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. எல்லா அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்குவது இல்லை என்றாலும், சிலர் கையூட்டு கொடுக்காமல் காரியத்தை செய்வது இல்லை என்கிறார்கள் பொதுமக்கள். அவர்கள் குறித்து ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார்கள் அளிக்கப்பட்டாலும், பெரிய மாற்றங்கள் இதுவரை ஏற்படவில்லை என்றே மக்கள் வருந்துகிறார்கள். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தை அளக்க கிராம நிர்வாக உதவியாளர் ஒருவர் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், தண்டுக்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என்று தரக்கோரி கொரட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களை முதல் கொண்டு விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து நிலத்தை அளவீடு செய்யாமல் இருந்த நிலையில் இது சம்பந்தமாக அந்த விவசாயி பலமுறை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். ஆனாலும் வேலை நடக்கவில்லையாம்.
இதனிடையே கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் அதேப்பகுதியைச் சேர்ந்த (30 வயதாகும்) வெண்ணிலா என்பவரை அந்த விவசாயி அனுகிய போது, அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் நிலத்தை அளக்க முடியும் என்று கூறினாராம். இந்த பணத்தை எனக்காக கேட்கவில்லை. நில அளவையர் ஒருவருக்கு கொடுப்பதற்காக தான் கேட்கிறேன் என்று தெரிவித்தாராம்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி முருகன், இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன் விரைவில் பணம் தயார் செய்து கொண்டு பணத்துடன் வருவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் அவர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.எல்.ஜி.எஸ்.சி. ராஜூவிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், லஞ்சஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி முருகனிடம் கொடுத்து அனுப்பி விட்டு, நேற்று முன்தினம் மாலை வேலையில் கொரட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே மறைந்திருந்தனர். பணத்துடன் சென்ற முருகன், விஏஓ-வின் உதவியாளரான வெண்ணிலாவிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெண்ணிலாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள் மற்றும் நில அளவை அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment