Sunday, 15 December 2024

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? பத்திரம் தொலைந்தால்?

சொத்து பத்திரங்களை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் தெரியுமா? வங்கி லாக்கரில் பத்திரங்களை வைக்கலாமா? ஒருவேளை அசல் சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால், அதற்கு முதலில் செய்யவேண்டியது என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

பாடுபட்டு நீங்கள் வாங்கிய சொத்துக்கள், உங்களுடையதுதான் என்பதை சட்டப்பூர்வமாக எடுத்துரைக்கும் ஆதாரம்தான் பத்திரங்கள்தான். எனவே, இந்த பத்திரங்களை கூடுதல் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.

சொத்து பத்திரங்கள் நம்மிடம் இருப்பதை போலவே, அரசு ஆவணங்களிலும் வைத்து பாதுகாக்க வேண்டும். அதேபோல, நம்முடைய பெயரிலேயே அந்த ஆவணங்கள் இருக்கின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அதேபோல, பிறரிடமிருந்து வாங்கப்படும் சொத்துக்களை பதிவு செய்துவிட்டு, சொத்து மாற்றம் செய்யப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். இவ்வளவும் செய்தால் மட்டுமே, அந்த சொத்து உங்களுடையது என்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும். மனப்பூர்வமாக நீங்களும் உரிமையாளராக முடியும்.. இதனால், உங்களது சொத்துக்களை யாராலும் விற்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது.

அதேபோல, சொத்துக்கான வரிவிதிப்பு இருந்தாலும் அதையும் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும்.. காலி இடம் அல்லது கட்டப்பட்ட வீடு எதுவாக இருந்தாலும், அதன் அளவுக்கேற்பவும், சொத்து அமைந்துள்ள கிராமம், அமைவிடம், போன்றவைகளுக்கேற்ப சொத்து வரி விதிப்பு செய்யப்படும்... நீங்கள் வாங்கிய சொத்துக்கான வரிவிதிப்பு, உங்கள் பெயருக்கு ஏற்படுத்துவதும் உங்கள் உரிமையை நிலைநாட்டக்கூடிய ஒரு கூடுதல் ஆவணம்தான்.

பத்திரங்கள் தவிர பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற இதர ஆவணங்களையும் பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டும். எப்போதுமே ஒரிஜினல் பத்திரங்களை ஒரு பாலித்தீன் கவரில் வைத்துவிட வேண்டும். அதற்குமுன்பு, பத்திரங்கள் அனைத்தையும் ஜெராக்ஸ், எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளில் ஒரிஜினல் பத்திரத்தையும், ஜெராக்ஸ் பத்திரத்தையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.

ஒரிஜினல் பத்திரம் ஒவ்வொன்றிலுமுள்ள சர்வே எண், பத்திரப்பதிவு எண்களை, பேப்பரில் தனியாக எழுதி வைத்து கொள்ளலாம். இதனால், பத்திரத்தை அவசர தேவைக்கு எங்காவது கொண்டு செல்லமானால், இந்த நம்பர்கள் மட்டுமே போதுமானது. அல்லது பத்திரங்களின் நகல்களை மட்டும் கொண்டு செல்லலாம். அதிலும், வெளியூர் அல்லது தொலைதூர பயணங்களுக்கு ஒரிஜினல் பத்திரத்தை கொண்டு செல்லவேக்கூடாது.

ஒரிஜினல் பத்திரங்களை எக்காரணம் கொண்டும் லேமினேஷன் செய்யக்கூடாது.. அப்படி செய்தால் பத்திரங்களின் நம்பகத்தன்மை போய்விடும்.. பத்திரங்கள் கவருடன் ஒட்டிக்கொண்டு எழுத்துக்கள் அழியவும் வாய்ப்புள்ளது.. அதுமட்டுமல்ல எத்தனை பத்திரங்கள் இருந்தாலும், அவைகளை ஒன்றாக சேர்த்து வைக்கக்கூடாது. தனித்தனியே பிரித்து வைப்பதே நல்லது.. இந்த பத்திரங்களுக்கு ரப்பர் பேண்ட், கிளிப்புகளை போடக்கூடாது.

வெறுமனே பாலித்தீன் கவரில் போட்டு வைக்கலாம். இதனால் தண்ணீர் கவருக்குள் போகாது.. அழுக்குகள் படிந்தாலும், கவரின் மேற்புரத்தை மட்டும் துடைத்து கொள்ளலாம். அதேபோல சிலர் பீரோவில் இந்த பத்திரங்களை போட்டுவிட்டு, பாச்சா உருண்டை என்ற ரசக்கற்பூரங்களை போட்டு வைப்பார்கள். ஆனால், இப்படியும் செய்யக்கூடாதாம். வெறும் ஃபைல்களில் அல்லது பாலித்தீன் கவரில் வைத்திருந்தாலே போதும்.

வெயில் நேரத்தில், பாலித்தீன் கவரிலுள்ள பத்திரங்களை பிரித்து, தனித்தனியாக காய வைக்கலாம். ஆனால், தண்ணீர் எதுவும் பத்திரம் மீது படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து, மீண்டும் பத்திரங்களை வெயிலிலிருந்து எடுத்து, பாலிதீன் கவருக்குள் போட்டு வைத்து கொள்ளலாம்.

பத்திரங்களை பத்திரமாக ஈமெயில் ஐடி (id)யில் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டால் கூடுதல் பாதுகாப்பாக இருக்கும். சொத்து பத்திரங்களை வங்கி லாக்கரில் வைத்தால் அது தொடர்பான விஷயங்களை அதாவது, எந்த லாக்கர், லாக்கர் எண் போன்ற விவரங்களை நெருங்கிய உறவினருக்கு தெரியப்படுத்திவிட வேண்டும். இது அவசரத்துக்கு உதவும்.

ஒருவேளை நம்முடைய அசல் சொத்து ஆவணங்களை எங்காவது தொலைந்துவிட்டாலோ அல்லது அவற்றை எங்காவது மறந்து வைத்துவிட்டாலோ, வேறு யாராவது இதைத் தவறாகப் பயன்படுத்தி உங்கள் சொத்தை உடைமையாக்க முயற்சிக்கலாம். அப்படி ஒருசூழல் வந்தால், உடனடியாக உங்கள் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் முதலில் FIR பதிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை FIR பதிவு செய்ய உள்ளூர் போலீசார் மறுத்தால், ஆன்லைன் மூலம் FIR பதிவு செய்யலாம்.. போலீஸ் மூலம் சொத்து ஆவணங்களை தேடிய பிறகும், உங்களது ஆவணம் கிடைக்கவில்லையானால், செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்க வேண்டிவரும். இந்த விளம்பரத்தில், சொத்து இழப்பு குறித்து அதன் முழு விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும். பிறகு 15 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

அதற்குள் யாராவது வைத்திருந்தால், இந்த விளம்பரத்தைப் பார்த்து உங்களிடம் ஆவணத்தை திருப்பித்தரலாம். 15 கழித்தும் ஆவணம் கிடைக்கவில்லையானால், துணைப்பதிவாளர் அலுவலகத்தில் நகல் ஆவணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, சொத்து முதலில் பதிவு செய்யப்பட்ட அதே துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இந்த விண்ணப்பம் வழங்கப்படும்.

இந்த விண்ணப்பத்துடன், FIR, கண்டறிய முடியாத சான்றிதழின் நகல், செய்தித்தாளில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தின் நகலை நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும். இதற்காக சிறிது கட்டணம் தரவேண்டியிருக்கும். இறுதியில், 15-20 நாட்களுக்கு பிறகு, சொத்தின் நகல் ஆவணங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...