தமிழ்நாடு முழுவதும் அலறிய POLICE மைக்… – தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்., ஐபிஎஸ்… உடன் ஒரு பேட்டி..!!
ஹலோ கன்ட்ரோல் ரூம்… காலிங் மைக் 2 (டிஜிபி அலுவலக மைக்கில் இருந்து மாவட்ட எஸ்பி-க்களுக்கு அழைப்பு சென்றது). ‘உங்க மாவட்டத்தில இந்த மாதம் ‘ட்ரக் அரஸ்ட்’ நல்லா பண்ணியிருக்கீங்க. வெரிகுட்… அடுத்த டிரைவ் இன்னும் வேகமா இருக்கனும்….”
அடுத்த அழைப்பு, ”என்ன போன மாசம் நல்ல ரிப்போர்ட் பண்ணீங்க. இந்த மாதம் ஒரு கேஸ் கூட இல்லையே.. அப்ப நீங்க சரியா வேலை பாக்கலன்னு அர்த்தம். இந்த மாதிரி இருந்தா எப்படி… உங்க மாவட்டத்துல கஞ்சா, குட்கா சுத்தமாக இருக்கக் கூடாது. ஹார்டு ஒர்க் பண்ணுங்க. பப்ளிக் கிரீவன்ஸ் பர்பெக்ட்டா இருக்கனும். புகார்கள் மீதான நடவடிக்கை ஸ்பீடா இருக்கனும்” – என மாவட்ட எஸ்பி-க்களுக்கு தனது கணீர், கம்பீர குரலில் போலீஸ் மைக்கில் உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார் தமிழ்நாடு சட்டம் –ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐபிஎஸ்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த டேவிட்சன், தனது அயராத முயற்சியால் இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய போதும் தோல்வியே பரிசாக கிடைத்தது. பின்பு மத்திய கலால்துறையில் இன்ஸ்பெக்டராக நியமனம் ஆகி தூத்துக்குடியில் பணிபுரிந்தவர், மீண்டும் மூன்றாவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார். 1995ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் ஆக தமிழக காவல் துறையில் கால் பதித்து தனது காக்கிப் பயணத்தை தொடர்ந்தார் டேவிட்சன்.
இவர் 7வது கடைக்குட்டி பிள்ளை தந்தை சவுந்திர பாண்டியன், தாயார் தேவசீலி. உடன் பிறந்தது 3 சகோதரர்கள், 3 சகோதரிகள். 7வது கடைக்குட்டி பிள்ளை தான் டேவிட்சன். முதலூர், புனித மைக்கேல்ஸ் துவக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு முடித்த பிறகு திருப்பூர் மாவட்டம், அமராவதிநகரிலுள்ள சைனிக் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தார். 12ம் வகுப்பில் அப்பள்ளியின் மாணவத் தலைவராக செயல்பட்டார். படிப்பு, விளையாட்டு, NCC, மேடைப்போட்டிகள், எழுத்து போட்டிகள் என பல போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்து, டில்லியில் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ சமூக அறிவியல் முதுகலைப்பட்டம் பெற்றார் டேவிட்சன்,
என்சிசியில் நாட்டின் 2வது சிறந்த கேடட் ஆக தேர்வு வாலிபால் ஆட்டத்தில் ஆர்வம் கொண்ட இவர் பள்ளியிலும், கல்லூரியிலும் போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகள் பெற்றுள்ளார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, கல்லூரியில் தமிழ்நாட்டு அளவில் என்சிசியில் சிறந்த மாணவராக தேர்வாகி கனடாவில் நடந்த யூத் எக்ஸ்சேஞ்ச் ( Indo -– -Canada Youth Exchange Programme) திட்டத்தில் கலந்து கொண்டார். 1988ம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெற்று என்சிசியில் நாட்டின் இரண்டாவது சிறந்த கேடட் ஆக டேவிட்சன் தேவாசீர்வாதம் தேர்வானது அவர் படித்த லயோலா கல்லூரிக்கு பெருமையைச் சேர்த்தது.
டேவிட்சன் தேவாசீர்வாதத்தை காவல்துறையில் அவரது சவாலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது கேட்பதற்கு சுவாரஷ்யமாக இருந்தது.
அவரது பேட்டி…
சகோதரி மற்றும் மாமா ஆகியோர் அளித்த ஊக்கம்
‘எனது சிறுவயதில் எங்கள் கிராமத்தில் டெபுடி கலெக்டர் ஒருவர் தேவாலய பாடகர் குழுவில் வயலின் வாசித்து கொண்டிருக்கும் போதே விழுந்து இறந்து விட்டார். டெபுடி கலெக்டர் என்றால் என்ன என்பது குறித்து எனது சகோதரி சாந்தி விளக்கம் கூறிய பின்பு, ஒரு வகையில் நானும் அரசாங்க பணியில் சேர்ந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் முதலாவதாகத் தோன்றியது. பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் எனது மாமா ரவீந்திரன் என்பவரும், அவரது நண்பர்களும் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத என்னை ஊக்குவித்தனர். எனது சகோதரி மற்றும் மாமா ஆகியோர்களின் ஊக்கம் என்னை ஐபிஎஸ் அதிகாரி ஆவதற்குறிய முயற்சிகளை செய்யத் தூண்டியது” என தான் ஐபிஎஸ் பணிக்கு வந்தது தொடர்பாக விளக்கி பேட்டியைத் துவங்கினார் டேவிட்சன்…
காவல் பணியில் மறக்க முடியாத அனுபவம்... கோவை மாநகரில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த பின்னர், நான் அங்கு உதவிக் கமிஷனராக நியமிக்கப்பட்டேன். எனக்கு மேல் அதிகாரிகளாக இருந்த கே. ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் ஆகியோரின் வழிகாட்டுதல் மூலம் கோவை மாநகரை மீண்டும் அமைதிப்பூங்காவாக அடுத்த ஒரு வருடத்திற்குள் கொண்டு வர முடிந்தது. அங்கு பணியாற்றிய போது உழைத்த உழைப்பு மறக்க முடியாத அனுபவம். அர்ப்பணிப்போடு அனைத்து அதிகாரிகளும், காவலர்களும் பணியாற்றிய தருணம் அது.
காவல்துறையில் சவாலான பணியாக அமைந்தது? 2000 – 2002 ஆம் ஆண்டு வரை கடலூரில் எஸ்பி-யாக பணிபுரிந்தேன். அந்த மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பணியை சீர் செய்வது அப்போது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மாவட்டத்தில் நடந்த ஜாதிப்பூசலால் சாலை மறியல், தீ வைப்பு, கலவரம் என்று சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியானது. அதனை கடின உழைப்பினாலும், துரித தைரியமான நடவடிக்கைகள் மூலமாக சமாளித்து அமைதியை நிலைநாட்டியது பெரிய சவாலான பணியாக இருந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் கடலூரில் பணிபுரிந்த அந்த 4 ஆண்டுகளும் எனக்கு மற்ற மாவட்டங்களிலும், நகரங்களிலும் பணிபுரிவதற்கு நல்ல முன்அனுபவமாக அமைந்தது. அதே போல பயிற்சியில் இருக்கும் போது விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட ஜாதிக் கலவரம் நடந்த போது விஜயகுமார், திரிபாதி போன்ற உயரதிகாரிகளோடு இணைந்து பணியாற்றியது சவாலான பணிகளை எதிர்கொள்ள ஒரு துவக்கமாக அமைந்தது.
திகில் நிறைந்த சட்டம்-ஒழுங்கு காவல் பணி அனுபவங்கள்? கோயம்புத்தூர், கடலூர் ஆகிய இடங்களில் பணிபுரிந்த போது பல சம்பவங்கள் இருந்தாலும் கூட, நமது நாட்டின் சார்பாக ஐ.நா. அமைதி காக்கும் படையில், தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள கொசோவோவில் அமைதிப்படையில் பணியாற்றியது பெரிய சவாலான பணி மட்டுமின்றி திகிலாகவும் இருந்தது. அல்பேனியர்களுக்கும், செர்பியர்களுக்கும் இடையிலான மோதல்கள், கலவரங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2004ம் வருடம் மார்ச் மாதம் நடந்த மிகப் பெரிய கலவரத்தில் மக்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் திகில் நிறைந்த அனுபவமாக இருந்தன. திகில் நிறைந்த அந்த மூன்று நாட்கள் ஓய்வின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது ஒரு பெரிய சாதனையாக இருந்தது. கை எறி குண்டுகள் வீசப்பட்டன. துப்பாக்கி சூடுகள் நடந்தன. தீ வைப்பு சம்பவங்கள் ஏராளம். அந்த சூழலில் செயல்பாட்டு மையத்தில் பணியாற்றி பலரை காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன.
மேலும் 2002 ஆம் ஆண்டில் சென்னையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த ஒரு கும்பல் தயாராகியிருந்தது. அல்கொய்தாவின் கிளை அமைப்புகளின் மிரட்டல்கள் உலகெங்கும் பரவி இருந்த சமயம் அது. அந்த சமயத்தில் தமிழக உளவுப்பிரிவு எஸ்பி-யாக அதனை எதிர் கொள்ள வேண்டிய சூழல். இரவும் பகலும் விழிப்புடன் செயல்பட்டு 20க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து 8 கிலோ வெடிமருந்தும் கைப்பற்றபட்டது.
மேலும் 2006 ஆம் ஆண்டு சென்னை நகரில் ரகசியமாக ராக்கெட் லாஞ்சர்கள் தயார் செய்து ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி வைத்த மாவோயிஸ்ட் குறித்த தகவல்களை 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து அகற்றியதும் மறக்க முடியாத அனுபவம்தான். அப்போது நான் கியூ பிரிவு எஸ்பி-யாகா இருந்தபோது,
2007ஆம் ஆண்டு நாகப்பட்டினம் கடலில் விடுதலைப்புலிகளின் படகில் ஆயுதங்கள் இருப்பதை கண்டுபிடித்து கடரோர பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணைக்காக Q பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அந்தப் படகை சென்னை துறைமுகத்தில் நிறுத்தி இருந்தனகள் கடல் புலி ஒருவரை நேருக்கு நேர் தனியாக ஐந்து நாட்கள் விசாரித்த பின்னர் தான் படகின் மறைவான பகுதிகளில் 500 கிலோ வெடிபொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் நான் மேற்கொண்ட விசாரணை மறக்கமுடியாத ஒன்றாகும். அந்தப் படகை நடுக்கடலுக்கு எடுத்து சென்று வெடிக்க வைத்தோம். அந்தப் பணியை கடலோர பாதுகாப்புப்படையினரும், தமிழ்நாடு காவல்துறையினரும் மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.
இன்டர்நேஷனல் கடத்தல் மன்னன் இபுறாஹிம் கைது.
சாதனையாக எனக்கு தெரிந்தது. உங்கள் வீட்டுக்குள் திருடன் நுழைந்தால் என்ன செய்வீர்கள்? மன்னிப்பா? தண்டனையா?
அவனைப் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன். மன்னிப்பதை விட அவன் மீது கைது நடவடிக்கை எடுத்தால்தான் மீண்டும் தவறு செய்யும் எண்ணம் வராது.
வாழ்நாள் சாதனையாக கருதுவது எதனை?
காவல் பணியில் மனசாட்சியுடன், தைரியமாக, நேர்மையுடன் பணியாற்றுவதே பெரிய சாதனைதான். சொந்த விறுப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பாரபட்சமின்றி நடவடிக்கைககள் மேற்கொள்வதில் இதுவரை எந்த இடர்ப்பாடும் தயக்கமும் எனக்கு ஏற்பட்டதில்லை. அதுவே பெரிய சாதனையாக கருதுகிறேன். எந்த பதவியோ, பணியாக இருந்தாலும் அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் இன்றும் நிலைத்திருக்கிறது.
மாணவச் செல்வங்களுக்கு நீங்கள் சொல்லும் அட்வைஸ்…?
செல்போன், சினிமா, சமூக வளைதளங்கள், யூடியூப் இவைகளால் இந்த தலைமுறை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது. செல்போன் மீது ஏற்படும் அதீத மோகம் மாணவர்களின் நலனை மிகவும் பாதிக்கும் சூழல்கள் உள்ளது. இந்த மோகத்தில் மாணவர்கள் வீழ்ந்து விடாமல் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும். கடின உழைப்பு, பொறுப்பு, ஒழுக்கம், நேர்மை, திட்டமிட்டு செயல்படுதல் ஆகியவற்றை கடைபிடித்தால் மாணவர்கள் தங்கள் வருங்காலத்தை சிறப்பாக உருவாக்க முடியும்.
பணிபுரிந்த இடங்கள்:
ஏஎஸ்பி (பயிற்சி)தர்மபுரி, ஏஎஸ்பி பரமக்குடி, கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர். கடலூர், கரூர், காஞ்சிபுரம் மற்றும் மாநில உளவுப்பிரிவு, கியூ பிரிவு ஆகியவற்றில் எஸ்பி-யாகவும், பதவி உயர்வு பெற்ற பிறகு டிஐஜி, ஐஜி மற்றும் கூடுதல் டிஜிபி-யாக உளவுப்பிரிவில் நீண்ட காலப் பணி மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மற்றும் போலீஸ் கமிஷனர் மற்றும் கோவை மண்டல ஐஜி, கோவை மாநகர ஆணையர் என பல முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை அலங்கரித்தவர். அது மட்டுமின்றி காவல் நிர்வாகப் பிரிவு, டெக்னிக்கல் சர்வீஸ், காவலர் நலன் பிரிவு, தமிழ்நாடு போலீஸ் அகாடமி, தலைமையிட ஏடிஜிபி என காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் அனைத்து பிரிவுகளிலும் பணிபுரிந்து அனுபவத் திறன் கண்டவர் டேவிட்சன் தேவாசிர்வாதம்.
No comments:
Post a Comment