தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். முன்னதாக வி.ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
1958 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மன்னார்குடியில் பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் இளம் அறிவியல் பயின்றார். அதன்பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1983ல் சட்டப் பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களிலும், மாநில நுகர்வோர் ஆணையம் உள்ளிட்டவற்றிலும் வழக்கறிஞராக பணிபுரிந்தார். 23 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய நிலையில், கடந்த 2006ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட அவர், 2009ல் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் இராமசுப்ரமணியன், தனது சொந்த வேண்டுகோளின் பேரில் ஹைதராபாத்திலுள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதியாகத் தொடர்ந்தார். பின்னர் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2019ல் பதவியேற்றார்.
அதன்பிறகு சில மாதங்களிலேயே, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு 2023 ஜூன் 29 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்றார் ராமசுப்பிரமணியன்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா கடந்த ஜூன் 1ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து NHRC உறுப்பினர் விஜயபாரதி சயானி இடைக்காலத் தலைவராக செயல்பட்டார். இந்நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment