Sunday, 29 December 2024

2025ஆம் ஆண்டின் நியூ இயருக்கு கொண்டாட்டங்கள்.. சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகள்!

நாட்டில் பல மாநிலங்களில் நாளை இரவு நாம் புத்தாண்டைக் கொண்டாடக் கோலாகலமாகத் தயாராகி வருகிறோம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு மோசமான விபத்துகளும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு மாநில அரசும் போலீசாரும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதன்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்துப் பார்க்கலாம்.

புத்தாண்டைக் கொண்டாட அனைவரும் தயாராகிவிட்டனர். புத்தாண்டு என்றாலே விடிய விடிய நடைபெறும் பார்ட்டி தான் அனைவருக்கும் நினைவில் வரும். இதுபோன்ற காலங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.

இதனால் போலீசார் புத்தாண்டு சமயத்தில் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அதன்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

சென்னையைப் பொறுத்தவரைப் புத்தாண்டு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பெருநகர காவல் கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் ஜன. 31ம் தேதி இரவு 9.00 மணியிலிருந்து காவல் அதிகாரிகள், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்திப் பாதுகாப்பை அதிகரிக்கக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய சாலைகளில் கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைக்கப்பட உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. கடற்கரையோரங்களில் உரியத் தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யப்படும். மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவையான இடங்களில் காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைக்கப்படும். முக்கிய இடங்களில் டிரோன் மூலம் கண்காணித்துக் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் பாஸ்போர்ட் போலீஸ் சரிபார்ப்பில் பிரச்சினை ஏற்படும் என்பதால் மது அருந்தவிட்டு ஓட்டுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெங்களூரைப் பொறுத்தவரை எந்த கொண்டாட்டமாக இருந்தாலும் அதிகாலை 1 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூர் உயர்த்தப்பட்ட எக்ஸ்பிரஸ் வே தவிர, நகரின் முக்கிய மேம்பாலங்கள் டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்.

மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவோரைக் கண்காணிக்க இரவு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்பீக்கர் பயன்படுத்தவும், பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இந்த முறை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு இடமாக இருந்தாலும் சரி, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டு இருந்தால் 15 நாட்களுக்கு முன்னதாகவே கண்டிப்பாக பெர்மிஷன் வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பார்கிங் மற்றும் நுழைவாயில்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி வெளிப்புற சவுண்ட் அமைப்புகள் இரவு 10 மணிக்குள் அணைக்க வேண்டும். உள்ளே நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கூட அதிகாலை 1 மணி வரை மட்டுமே ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். அதுவும் 45 டெசிபல் அளவுக்கு மட்டுமே இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10,000 வரை அபராதம், கைது நடவடிக்கை மற்றும் வாகன பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நகரங்களுடன் ஒப்பிடும் போது மும்பையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கருத்தில் கொண்டு பார், ஹோட்டல், பப் ஆகியவை காலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி தரப்பட்டுள்ளது. வெளிப்புறம் நடக்கும் நிகழ்ச்சிகள் சத்தமான ஒலி இல்லாமல் நள்ளிரவிலும் தொடர்ந்து நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மது விற்பனைக்கும் எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது. அதேநேரம் அது குடிப்போர் தனியாக டிரைவரை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போதை மருந்து பயன்பாட்டைத் தடுக்கவும் சோதனைகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...