Sunday, 22 December 2024

ஓசூர் மாநகராட்சி பகுதியில் ரூ. 582.54 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மாவட்ட ஆட்சியாளர் பங்கேற்பு!

குப்பை வரி கேட்டால் பொது மக்களுக்கு கோபம், வசூலிக்காவிட்டால் ஒன்றிய அரசு நிதி தர மறுக்கிறது.. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி...- ஓசூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் கே.என். நேரு பேச்சு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 582.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள புதிய பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு அரசின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, ஆகியோர் பங்கேற்று பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் திருமதி கே. எம். சரயு, ஐஏஎஸ், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி. கே கோபிநாத், ஓசூர் மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா, ஓசூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஒய். பிரகாஷ், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தே. மதியழகன், தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி. இராமச்சந்திரன், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் எச்.எஸ். ஸ்ரீகாந்த். நகராட்சி நிர்வாக இயக்குனர் சு.சிவராசு. மேலாண்மை குழு இயக்குனர் தட்சிணாமூர்த்தி. பொதுமக்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, மூன்றரை ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின் படி குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாக துறையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அதேபோல ஓசூர் பகுதிக்கு தேவையான புதிய பேருந்து நிலையம், புதிய மார்க்கெட், சாலை வசதிகள் மேம்படுத்துதல், அறிவு சார்ந்த மையம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை, முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றித் தரப்படும்.

ஸ்வச் பாரத் மிசின் எனப்படும் குப்பை வரி விவகாரத்தில் கடந்த 2017 - 18 ஆம் ஆண்டுகளிலேயே, மாதந்தோறும் வீட்டிற்கு 30 ரூபாய் என்றும் தொழிற்சாலைகளுக்கு 300 ரூபாய் என விதிக்கப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக மொத்தம் 118 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது அதனை வசூல் செய்தால் பொதுமக்கள் சண்டை போடுகிறீர்கள். இதனை வசூலிக்காவிட்டால் ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல, மக்கள் வரி செலுத்த கூறினால் கோபித்துக் கொள்கிறார்கள், இதை வசூலிக்காவிட்டால் ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது. 

எனவே நிலுவைத் தொகையை மொத்தமாக வசூல் செய்வதை விட பகுதி பகுதியாக வசூலிக்கலாம். ஆனால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பொறுத்தவரையில், இது நிதி சம்பந்தப்பட்டது என்பதால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரால்தான் முடிவு எடுத்து அறிவிக்க முடியும் என்று பேசினார். 

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற சட்டமன்ற மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்புத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாநகராட்சி துணை மேயர் சி.ஆனந்தைய்யா வாழ்த்துரை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...