தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டத்தினை அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் பெறும் வகையில் விரிவாக்கம் செய்தார். அதன்படி இனி அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியருக்கும் ரூ.1000 வழங்கப்படும்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள்.
பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். அரசுப் பள்ளிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி. தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறார்கள்.
இத்திட்டங்களுள் புதுமைப் பெண் திட்டம் 05.9.2022 அன்று வடசென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன் முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இத்திட்டம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேரஇயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக, மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.
புதுமைப் பெண்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, திருவள்ளுவர் மாவட்டம், பட்டாபிராமிலுள்ள இந்து கல்லூரியில் 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத் திட்டக்குழு நடத்திய ஆய்வில், கடந்த 05.9.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நாளது வரையில், 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியர்க்கும் பயன் தருகிறது புதுமைப் பெண் திட்டம். புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் 1,000 வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடியில் 30.12.2024 திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்கள். இதன் பயனாக, தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் மாதம் 1,000 ரூபாய் பெற்றுப் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment