தொழில் நகரமான திருப்பூரில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட ஏராளமான வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தங்களது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே இவர்கள் வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை செய்து வருகிறார்கள். கடந்த காலங்களில் வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது, அதை ஊருக்கு அனுப்புவது மட்டுமே இவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், இப்போது தாங்கள் வேலை செய்தாலும் தங்களது குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்ற சிந்தனை இவர்களுக்கு வந்துள்ளது.
இதனால் அங்குள்ள அரசு பள்ளிகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமாகச் சேர்த்து வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர்.
குறிப்பாக அரசுப் பள்ளிகளில் சேர்ப்பவர்களின் எண்ணிக்கையானது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இங்கேயே தங்கி இருந்து பணிபுரிந்து வருவதால் அவர்களின் குழந்தைகள் தமிழை நன்றாக கற்று தமிழ் பேச வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின் கல்விக்காகச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடமாநில குழந்தைகளுக்கு எனத் தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் இந்தி மொழியில் குழந்தைகளிடம் பேசி அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியும் இந்தி மூலமாகத் தமிழ் வழிக் கல்வியும் கற்பித்து வருகின்றனர்.
முதலில் எழுத்து வடிவம் பின்னர் கதை வடிவிலான பாடங்கள் என சிறுக சிறுக அவர்களுக்குத் தமிழைப் புரிய வைத்து, அதன் பிறகு தமிழ் வழிக் கல்வியைப் பயில வைப்பதாகக் குறிப்பிடும் ஆசிரியர்கள், ஆரம்பக் காலங்களில் தமிழ் மொழி கற்கச் சிரமப்பட்டாலும் போகப்போகத் தமிழ் வழிக்கல்வியை வட மாநில குழந்தைகள் சிறப்பாக கற்றுத் தேர்ந்து வருவதாகவும் தமிழில் எழுதவும் படிக்கவும் நன்கு பழகி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த வேலை சவால் மிக்கதாக இருந்தாலும் கூட மற்ற மாநில குழந்தைகள் தமிழ் கல்வியை விரும்பி படிப்பதைக் காணும்போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் இந்தாண்டு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதாவது வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவு திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் வட மாநில மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment