ஆந்திரப் பிரதேசம், பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தில் எம்.சிங்குபுரம் எனும் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வரும் (32 வயது) மதிக்கத்தக்க யஜ்ஜால வெங்கண்ணா என்பவர் மதுப் பழக்கத்திற்கு கடுமையாக அடிமையாகி இருந்திருக்கிறார். வீட்டில் எவ்வளவோ சொல்லி பார்த்தும் அவரால் குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. அவரது தாயும் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால் பலன் இல்லை. இப்படி இருக்கையில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியன்று அந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அதாவது அடுத்த நாள் விடிந்தால் புத்தாண்டு, எனவே வயிறு முட்ட மது குடிக்க வேண்டும் என்று வெங்கண்ணா விரும்பியிருக்கிறார். கையில் இருந்த காசுக்கு இரண்டு குப்பிகளை வாங்கி உள்ளே செலுத்திக்கொண்டார். ஆனாலும் போதை உச்சத்தை எட்டவில்லை. எனவே கூடுதல் பானத்திற்காக பல இடங்களில் அடி போட்டிருக்கிறார். எங்கும் கிடைக்கவில்லை. இறுதியாக அவரது தாயிடம் வந்து கேட்டிருக்கிறார். தாய்க்கு முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை கிடைக்கிறது.
பெரும்பாலும் வயதானவர்கள் அதிகமாக செலவு செய்ய மாட்டார்கள். அப்படித்தான் வெங்கண்ணாயாவின் தாயாரும் காசை சேர்த்து வைத்திருக்கிறார். இந்த தொகையை எப்படியாவது அடைந்தே தீருவது என்று கணக்கு போட்ட அந்த மது பிரியர் வெங்கண்ணா, பணத்தை கேட்டிருக்கிறார். தாய் கொடுக்கவில்லை. குடிக்க வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் வயிறு முட்ட மது குடித்துவிட்டு வந்து, மேலும் சரக்குகக்காக என்னிடமே காசு கேட்கிறாயா? என்று திட்டி பணம் கொடுக்காமல் விரட்டியுள்ளார்.
இதனால் மனம் உடைந்துபோன அந்த மது பிரியர் வெங்கண்ணா என்ன செய்வது என்று தெரியாமல் தன் வீட்டு அருகாமையிலுருந்த மின் கம்பத்தின் மீது சரசரவென்று ஏறியிருக்கிறார்.
இந்த கூத்தை எல்லாம் தொடக்கத்திலிருந்து கவனித்து வந்திருந்த அப்பகுதி மக்கள், வெங்கண்ணா மின் கம்பத்தில் ஏறுவதை பார்த்து மிரண்டு போயுள்ளனர். உடனே அவசரமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் வெங்கண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் யார் பேச்சையும் கேட்காத அந்த மது பிரியர் கிடுகிடுவென மின் கம்பத்தின் உச்சிக்கு சென்று, அங்கு நீண்டுக்கொண்டிருந்த கம்பிகள் மீது ஏறி படுத்துக்கொண்டார்.
அதென்ன பஞ்சு மெத்தையா சயனம் கொள்வதற்கு? தொட்டால் தூக்கிடும் மின்கம்பம் அது! எனவே மக்கள் கூட்டமாக சேர்ந்து கூச்சல் போட்டிருக்கிறார்கள். வெங்கண்ணா காதில் எதுவும் விழவில்லை. எனவே அவர் இறங்கவில்லை. பின்னர் கூடுதல் சரக்குக்கு பணம் தருவதாக பேசி சமாளித்து வெங்கண்ணாவை கீழே இறக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் மட்டுமல்லாது, ஆந்திரா முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது தற்போது சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் வெங்கண்ணா என்ன பிராண்ட் சரக்கை அடித்திருப்பார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment