Friday, 3 January 2025

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி.. பள்ளியின் தாளாளர் உட்பட 3 பேர் கைது!


பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக கூறி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் காலை 11 மணிக்கு குழந்தை துருப்பிடித்த மூடியின் காரணமாக செப்டிக் டேங்கிற்குள் விழுந்ததாகவும், மாலை 3 மணிக்கு தான் பள்ளி நிர்வாகம் குழந்தையை தேட தொடங்கியது தான் பலிக்கு காரணம். குழந்தை செப்டிக் டேங்கில் மிதந்துள்ளது என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

விக்கிரவாண்டியிலுள்ள தனியார் பள்ளியில், எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றரை வயது மாணவி லியா பிரியதர்சினி என்ற குழந்தை எல்கேஜி சி வகுப்பில் பயின்று வந்தார். இந்த வகுப்பறையில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் தான் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறை அருகேயே செப்டிக் டேங்க் உள்ளது. இந்த செப்டிக் டேங்கை சுற்றி வேலி அமைக்கப்பட்டு இருந்தது. செப்டிக் டேங்க் மேலே ஒரு இரும்பு தகரத்தினை கொண்டு மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி லியா பிரியதர்ஷினி எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டி அருகே சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த தொட்டியில் மூடப்பட்டிருந்த இரும்பு தகரம் உடைந்து சிறுமி உள்ளே விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற சிறுமிகள் வகுப்பு ஆசிரியர்களிடம் தகவல் கூற உடனடியாக ஆசிரியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் அங்கு வந்து குழந்தை லியா பிரியதர்ஷினியை மீட்டனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளியில் பணியிலிருந்த ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் எல்கேஜி படிக்கும் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

முன்னதாக பள்ளிக்கும் மதியத்திற்கு பிறகு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து போலீசார் கழிவுநீர் தொட்டி இருக்கும் இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று பெற்றோர்கள் கூறி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் மூன்றரை வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய காவல் நிலையம் அருகில் வசித்து வரும் பழனிவேல் - சிவசங்கரி தம்பதியரின் ஒரே மகளான மூன்றரை வயது சிறுமி, விக்கிரவாண்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார்.

நேற்று பகல் 12 மணிக்கு உணவு இடைவேளையின் போது பள்ளிச் சிறுவர் சிறுமிகள் வகுப்பறையில் இருந்து வெளியே விளையாடிவிட்டு, மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர். பின்னர், ஆசிரியர் ஏஞ்சல், குறிப்பிட்ட சிறுமி இல்லாதால் பிற வகுப்பறைகளில் தேடியுள்ளார்.

எங்குமே இல்லாததால், பள்ளிச் சிறுவர்கள் விளையாடிய இடத்தில் தேடியபோது, அருகில் இருந்த கழிவுநீர் தொட்டி மேல் மூடி தகரம் உடைந்திருந்தது. அதன் வழியே பார்த்தபோது, கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை இருந்தது தெரியவந்தது.

உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர், சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம், பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களை மாலை 3 மணிக்கு வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். ஆனால், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வழக்கம் போல் சிறுமியை அழைத்து செல்ல அவரது தாத்தா கார்மேகம் பள்ளிக்கு வந்தபோது தான், சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவால் தான் சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழக்க வாய்ப்பே இல்லை என்றும் எனவே, எப்படி குழந்தை இறந்தது என்று பள்ளி நிர்வாகம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் தொட்டியைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வளைத்து குழந்தை மேலே ஏற காரணம் என்ன? குழந்தை கழிவுநீர் தொட்டி அருகில் செல்ல காரணம் என்ன? என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.

பள்ளியில் செயல்பட்டு வரும் சிசிடிவி பதிவுகளை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவியின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் 3 வயது குழந்தை கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் நேற்று பள்ளி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் நிலையில் இன்று பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதற்கிடையே, விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தையின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு, ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...