Friday, 10 January 2025

பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை ஜெயில்.. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டத் திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து "யார் அந்த சார்?" என்ற பேட்ஜுடன் வந்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கச் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டத் திருத்த மசோதாவை நேற்று தாக்கல் செய்தார்.

பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை, பாலியல் குற்றங்களுக்கு பிணையில் விடுவிக்காத படி சிறை; குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் மூன்று முதல் 5 ஆண்டுகள் வரை சிறை; பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.

டிஜிட்டல் முறை, மின்னணு ரீதியான குற்றங்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் என உள்ளது. இதை, முதல் தண்டனை தீர்ப்பின்பேரில் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என நீட்டிக்கப்படும். இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனை தீர்ப்பின்போது 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

வன்கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் வன்கொடுமைகளுக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் என உள்ளது. தற்போது அது முறையே 15 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் என விதிக்கப்படும்.

கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்றப் பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் மறைத்தால் விதிக்கப்படும் ரூ.2 ஆயிரம் அபராதம் என்பது ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

அதேபோல, வன்கொடுமைக்கு 14 ஆண்டு கடுங்காவல் முதல் அபராதத்துடன் ஆயுட்கால சிறை தண்டனை. காவல் துறை அலுவலர், சிறைச்சாலை அலுவலர், அரசு அலுவலர், மருத்துவமனை பணியாளர் வன்கொடுமை குற்றவாளியாக இருந்தால் 20 ஆண்டு கடுங்காவல் முதல் ஆயுட்கால சிறை தண்டனை. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்தால் கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. மீண்டும் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது கடுங்காவல் ஆயுள் தண்டனை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை.

பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் அல்லது பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் அபராதத்துடன் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. பெண்ணை பின்தொடர்ந்தால் அபராதத்துடன் 5 ஆண்டு வரை சிறை தண்டனை. இதே குற்றம் தொடர்ந்தால், அபராதத்துடன் 7 ஆண்டு வரை சிறை தண்டனை. ஆசிட் வீசி கொடுங்காயம் ஏற்படுத்தினால் அபராதத்துடன் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை. ஆசிட் வீசுவதாக மிரட்டினால் அபராதத்துடன் 10 ஆண்டு முதல் ஆயுட்கால சிறை தண்டனை வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...