தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் தராத துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் இருவரும் ரூ.1,000 அபராதம் செலுத்த தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்களும் கூட பொது தகவல் அலுவலர்கள்தான் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறு என்றாலும் அதனை தமிழ்நாடு தகவல் ஆணையமே மறுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர் வருத்தம் தெரிவிக்கிறார்.
மதுரையைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் என்.ஜி. மோகன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாளிட்ட கடிதத்தில், மதுரை மாவட்டம், முள்ளிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலருக்கும், மேற்கண்ட அதே தேதியில் மண்ணாடி மங்கலம் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக 11 தகவல்களை கேட்டிருந்தார்.
மேற்கண்ட இருவரும் தகவல் வழங்காத நிலையில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், அதற்கும் மேல் முறையீட்டு அலுவலர் தகவல் அளிக்காததால், தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆன்லைனில் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின்போது தனக்குரிய தகவல்களைத் தகவல் ஆணையம் தர மறுத்ததால், அந்த விசாரணையை ஆர்டிஐ ஆர்வலர் என்.ஜி.மோகன் புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார்.
இந்நிலையில், 2024, நவம்பர் 12-ஆம் நாளிட்ட தகவல் ஆணையத்தின் கடிதத்தில், மேல்முறையீட்டாளருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் வழங்காததால், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக தகவல் பெறும் உரிமைச்சட்டப் பிரிவு 19(8)(B)-ன்படி மேற்கண்ட ஒவ்வொரு வழக்கிற்கும் தலா ரூ.1,000 வீதம் ரூ.2,000-ஐ அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து என்.ஜி.மோகன் கூறுகையில், 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு முறையும் தகவல் பெறுவதற்கு கடும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு சற்று ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும்கூட, கிராம நிர்வாக அலுவலர்களும் கூட பொது தகவல் அலுவலர்கள்தான் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறு. ஆனால், அதனை தமிழ்நாடு தகவல் ஆணையமே மறுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment