தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களுக்கு பிஞ்சு வயதிலேயே ஏற்பட்ட காதல் போட்டியால் பேருந்து நிலையத்தில் சண்டையிட்டு, கட்டி புரண்டு தரையில் உருண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பள்ளி நாட்களில் மாணவர்கள் பேருந்து நிலையத்திற்குள் மோதிக் கொள்ளும் நிலை தொடர்வதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்கள் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
மேலும் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்வதாகக் கூறி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து, பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கூறினாலும், ஆசிரியர்கள் கூறினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு தலைநகரான சென்னையில் கைகளில் கத்திகளுடன் பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் மாஸ் காட்டுவதாக நினைத்து அட்டகாசம் செய்து வரும் மாணவர்களின் அத்துமீறலால் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும், மாணவர்கள் குழுவாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருவது பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களுக்கு பிஞ்சு வயதிலேயே ஏற்பட்ட காதல் போட்டியால் பேருந்து நிலையத்தில் சண்டையிட்டு, கட்டி புரண்டு தரையில் உருண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள முருகமலை என்னும் பகுதியில் இருந்து அரசுப் பேருந்தில் பெரியகுளம் பேருந்து நிலையம் வந்து இறங்கிய இரண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
மேலும் இருவரும் ஆபாசமான வார்த்தைகளால் பேசி திட்டிக் கொண்டதுடன் ஒருவருக்கொருவர் கொலை மிரட்டலும் விடுத்து, சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டு தரையில் படுத்து உருண்டு சட்டையை கிழித்து சண்டையிட்டனர். இவர்கள் இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டதைப் பார்த்த மற்ற பள்ளி மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் இருவரையும் விலக்கி விட்ட போதும் இருவரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர்.
இரண்டு மாணவர்களும் ஒரே பெண்ணை (சிறுமியை) காதலிப்பதாகவும், இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் காதல் போட்டி காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கிற வயதில் காதல் வயப்பட்டதுடன் காதல் போட்டி காரணமாக சக மாணவர்கள் இருவர் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கட்டி புரண்டு தரையில் உருண்டு சண்டையிட்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு மாணவர்களும் தினசரி காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பெரியகுளம் பேருந்து நிலையம் பகுதியில் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
No comments:
Post a Comment