திருப்பூரில் நிலத்தின் உரிமையாளர் தரப்பில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று வாடகைக்கு குடியிருப்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சிவில்' புகாரை அலட்சியமாக கையாண்டதோடு, ஒருதரப்புக்கு ஆதரவாக பெண் காவல் ஆய்வாளர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து திருப்பூர் துணை காவல் ஆணையாளர் ராஜராஜன் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை 'சஸ்பெண்ட்' செய்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஐபிஎஸ்., உத்தரவிட்டார்.
சிவில் வழக்குகள் தொடர்பாக விசாரிக்க மாட்டோம்.. உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு காவல் நிலையங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில காவல் நிலையங்களிலுள்ள
காவல் அதிகாரிகள் சிலர், சிவில் வழக்குகளில் தலையிட்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக புகார்கள் உள்ளது.
நிலம், வீடு சம்பந்தமான தகராறுகளில் (நிலம், வீடு, லீஸ் என எந்த வகையான மோசடிக்கு புகார் அளிக்கலாம்) சிவில் சம்மந்தப்பட்ட புகார், வழக்குகளில் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற வேண்டும். அப்பிரச்னை தொடர்பாக சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே போலீசார் விசாரிப்பது வழக்கமாக உள்ளது. அதோவது அடிதடி, கொலை மிரட்டல், பணம் பறித்தல், ஏமாற்றுதல் போன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு தான் போலீஸ் தலையிடுகிறார்கள்.
அதேநேரம் சொத்து பாகப் பிரிவினை, வாடகை தர மறுத்தல், வீட்டை காலி செய்யாமல் இருத்தல், குத்தகை விடுதல், ரத்து செய்தல், இடப்பிரச்னை தொடர்பாக போலீசார் விசாரணை செய்ய அனுமதியில்லை.. அந்த பிரச்சனை உள்ளவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும்.
இந்நிலையில் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்பவர் பெங்களூரில் இருக்கிறார். இவருக்கு செல்லம் நகர்- பாரப்பாளையம் செல்லும் சாலையில் 30 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த இடத்தை குமார், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஜீவானந்தம், ராஜா ஆகியோருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இடம் ஒப்பந்தம் எதுவும் போடப்படாமல் வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் தரப்பில் இடத்தை காலி செய்ய சொல்லி உள்ளனர். இதில் வாடகைக்கு இருந்தவர் அதிக அளவில் செலவு செய்து இருப்பதாக தெரிவித்து மறுப்பு தெரிவித்தாராம். இதையடுத்து இடத்தின் உரிமையாளர் குமார், திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சி.எஸ்.ஆர். மட்டும் பதிவு செய்து தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இடத்தை காலி செய்து தரக்கோரிய விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் சிவில் பிரச்சினையில் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் ஆய்வாளர் ராஜஸ்வரி மீது புகார் எழுந்தது. மேலும் சிவில்' புகாரை அலட்சியமாக கையாண்டதோடு, ஒருதரப்புக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையாளர் ராஜராஜன் விசாரித்தார். தனது விசாரணை அறிக்கையை, திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு அறிக்கை சமர்பித்தார். இதையடுத்து திருப்பூர் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment