Sunday, 5 January 2025

அதிமுக ஆட்சியின் போது சிறைத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.100 கோடிக்கு முறைகேடு: சிறைத்துறை அதிகாரிகளின் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டில் பல ஆதாரங்கள் சிக்கியுள்ளது!

தமிழ்நாட்டில், அதிமுக ஆட்சியின்போது சிறைத்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு நடந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து மதுரை சிறைத்துறையில் பணியாற்றும் எஸ்பி, கூடுதல் எஸ்பி, நிர்வாக அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் உட்பட 11 பேருக்கு சொந்தமான இடங்களில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய சோதனை நடத்தினார்கள். கடலூர் மத்திய சிறைத்துறை எஸ்பியாக ஊர்மிளா கடந்த 10.2.2016 முதல் 27.6.2021 வரை பணியாற்றினார். தற்போது மதுரை மத்திய சிறையில் எஸ்பியாக உள்ளார். அதேபோல், பாளையங்கோட்டை சிறைத்துறை கூடுதல் எஸ்பியாக இருந்த வசந்தகண்ணன் 25.06.2019 முதல் 9.06.2021 வரை பணியாற்றி வந்தார். தற்போது மதுரை சிறை துறையில் பணியாற்றி வருகிறார். வேலூர் மத்திய சிறையில் நிர்வாக பிரிவு அதிகாரியாக தியாகராஜன் 31.07.2019 முதல் 31.03.2023 வரை பணியாற்றினர்.

தற்போது மதுரை சிறைத்துறை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணியாற்றிய காலகட்டத்தில கடலூர், பாளையங்கோட்டை, வேலூர் மத்திய சிறைத்துறைக்கு தேவையான பேனா, பேப்பர் உள்ளிட்ட உபகரணங்கள் மொத்தமாக வாங்க மதுரை மற்றும் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களில் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டது. அப்படி கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஒரு குறிப்பிட்ட பர்சன்டேஜ் தொகையை கமிஷனாக சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், சிறைத்துறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகியோர் பல லட்சம் ரூபாய் பெற்றது தெரியவந்தது. அதேநேரம் கொள்முதல் செய்த உபகரணங்களும் தரம் குறைவாக இருந்தது.

அதேசமயம் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த ஸ்டேஷனரி மற்றும் மருத்துவ பொருட்களை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாக போலி ரசீது தயாரித்து ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கடந்த 2021ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டது. அதன்படி 2017-18, 2018-19 ஆகிய நிதி ஆண்டுக்கான வரவு, செலவுகளை தணிக்கை செய்யும் வகையில் மதுரை மத்திய சிறை நிர்வாகத்திடம் தணிக்கை துறை பதிவேடுகளை கோரியது. ஆனால், இந்த பதிவேடுகளை தணிக்கை துறையிடம் சிறை நிர்வாகம் வழங்கவில்லை. இந்நிலையில் பொருட்கள் தயாரிப்புக்காக ரூ.1.51 கோடி மதிப்பிலான மூல பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களின் ஜி.எஸ்.டி அறிக்கைகளை தணிக்கைதுறை ஆய்வு செய்தது. இதில், அந்நிறுவனங்கள் மூலம் சிறைத்துறைக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரிந்தது. தமிழ்நாட்டிலுள்ள 3 மத்திய சிறைகளில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.14.35 கோடி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தணிக்கை துறை சுட்டிக்காட்டியது.

இதுகுறித்து தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் தலைமை இயக்குநர் உத்தரவுப்படி மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் மதுரை மத்திய சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் ஊர்மிளா, சிறைத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன் மற்றும் சிறைத்துறைக்கு தேவையான உபகரணங்களை வழங்க டெண்டர் எடுத்த தனியார் நிறுவன நிர்வாகிகள் உட்பட 11 பேர் 120(பி), 467, 468, 471, 167, 409, உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, கூடுதல் எஸ்பி வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன்,

ஒப்பந்தம் பெற்ற நிறுவன நிர்வாகி முகமது அன்சாரி, சென்னையிலுள்ள முகமது அலி, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சீனிவாசன், கொடுங்கையூரைச் சேர்ந்த சாந்தி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி, வெங்கடேஸ்வரி என 11பேருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒப்பந்தம் பெற்றபோது லஞ்சமாக பெற்ற பணம் குறித்த முக்கிய ஆவணங்கள் பல சிக்கியது. அதில் குறிப்பாக மதுரை சிறைத்துறை எஸ்பியாக உள்ள ஊர்மிளா வீட்டில் இருந்து வழக்குத் தொடர்பாக பல ஆவணங்கள் சிக்கியது. மேலும், வங்கி கணக்கு வழக்குகள் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றியதாக மேலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் - சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்...