Monday, 6 January 2025

அதிமுக மாஜி மந்திரி ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காத தமிழக போலீசார்.. சிபிஐ வாசம் மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலகட்டங்களில் பால்வளத்துறை மந்திரியாக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்தப் புகாரில் விருதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது. ஆனால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ அதிகாரியின் கைக்கு விசாரணைக்காக மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை மந்திரியாக இருந்தார். ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி பணம் வசூல் செய்து மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

மாநிலம் முழுவதும் ராஜேந்திர பாலாஜி மொத்தம் 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. விருதுநகர் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் மூலமாக பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ரவீந்திரன் என்பவர் சார்பில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.


அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த வழக்கில் நாளடைவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


வழக்குப்பதிவு செய்தாலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை போக்கு காட்டுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக ரவீந்திரன் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ராஜேந்திர பாலாஜி முன்னாள் மந்திரி என்பதால் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறார். அதனால் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறது என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


இந்தநிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்  (ஜனவரி 6 ஆம் தேதியான நேற்று) நீதிபதி வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையினர் தரப்பில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால் காவல்துறையின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டும் காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. காவல்துறைக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு நேரம் இல்லை. எனவே இந்த வழக்கை இனி சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கட்டும். இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.





No comments:

Post a Comment

பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் - சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்...