வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட குடியாத்தம் பிச்சனூர் கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துமாறு 22 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், 'தரம் உயர்த்துவதற்கான வாய்ப்பில்லை' என்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் அளித்துள்ள பதிலால் நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விதிமுறைகளைத் தளர்த்தி நெசவாளர்களின் குழந்தைகள் உயர்கல்விப் பயிலும் வகையில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்ட ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியும், கல்வித் துறை அலுவலர்கள் அலட்சியத்துடன் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குடியாத்தம் நகரின் இதயப் பகுதியான பிச்சனூரில் நெசவாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கங்கதாரசாமி மடாலயத் தெருவில் நகராட்சி ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. 1972-ஆம் ஆண்டில் பிச்சனூரில் இதற்கான இடமும், கட்டடத்தையும் தெருவாசிகளே ஏற்படுத்தி நகராட்சிக்கும் கல்வித் துறைக்கும் ஒப்படைப்பு செய்தனர். இந்தப் பள்ளி பின்னர் 2000-ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து, பட்டதாரிகளாகி பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். மத்திய, மாநில, தனியார் நிறுவனங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இருந்துவருகின்றனர். இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று 22 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். எட்டாம் வகுப்பு படித்து முடித்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்ல வேண்டும் எனில், தனியார் பள்ளிகளை நாடும் சூழல் உள்ளது. அங்கு பல்லாயிரம் ரூபாயை இழக்க வேண்டியுள்ளதால் பலரும் இடைநிற்றல் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இதுதவிர, நன்கொடைக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கும் நெசவாளர்கள் தள்ளப்படுகின்றனர். இந்தச் சூழலில் 2003-ஆம் ஆண்டு முதல் பள்ளியை உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். பங்களிப்புத் தொகையான ஒரு லட்சம் ரூபாயை 2015-இல் மக்கள் செலுத்தினர். இதுவரையில் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. 2006-11 திமுக ஆட்சியின்போது, குடியாத்தம் நகருக்கு வருகை தந்த அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக் குழுவினர் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி கருத்து அடங்கிய புத்தகத்தையும் அளித்துள்ளனர். அதிமுக ஆட்சியின்போது, 2012-இல் இந்தப் பள்ளிக்கு வருகை தந்த வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் மனு அளிக்கப்பட்டதாகவும், மூன்றாவது நாளே கல்வித் துறை அமைச்சராக மாறுதலாகியும், அவர் வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 'பள்ளிக்கு விளையாட்டு மைதானம் வசதி இல்லை' என்ற காரணத்தைக் கூறி அரசு தட்டிக் கழிப்பதாக வேதனையுடன் கூறும் பெற்றோர்கள், 'அருகேயுள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை கல்வித் துறைக்கு வாடகை அடிப்படையில் அறநிலையத் துறை அளித்து பள்ளியைத் தரம் உயர்த்தலாமே' என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இந்த நிலையில், பள்ளியைத் தரம் உயர்த்தக் கோரி டிசம்பர் 2-ஆம் தேதி பிச்சனூர் காமராஜர் சிலை அருகே புதிய நீதிக் கட்சியின் நகரச் செயலாளர் கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ், பள்ளியின் முன்னாள் கல்விக் குழுத் துணைத் தலைவர் கோ.ஜெயவேலு ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. போராட்டத்தில் அதிமுக நகரச் செயலாளர் ஜே.கே.என்.பழனி, காங்கிரஸ் நெசவாளர் அணி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எம்.தேவராஜ், வழக்கறிஞர்கள் எஸ்.சம்பத்குமார், என்.குமார், ஜே.தியாகராஜன், சுதாபிரபு, பாரத், வடிவேல், குப்பம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் எஸ்.டி.மோகன்ராஜ், பி.எம்.தினகரன், வி.ஜி.பழனி, ராமசந்திரன், பூங்கோதை, ராணி, அமமுக நகரச் செயலாளர் சங்கர், பாமக நகரச் செயலாளர் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் குபேந்திரன், புதிய நீதிக் கட்சியின் நிர்வாகிகள் தி.பிரவீன்குமார், ஜி.குமரவேல்,எஸ்.வெங்கடேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜே.நேரு, கே.கோதண்டன், சரத்சந்தர், எழுத்தாளர் முல்லைவாசன், கம்யூனிஸ்ட் நிர்வாகி கே.முருகானந்தம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக, வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி., ஐஏஎஸ்., அவர்களையைச் சந்தித்து கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ் தலைமையில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்ற எம்எல்ஏ அமலு விஜயன் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து, 'பள்ளியைத் தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் அரசு விரைந்து செயல்பட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சருடனான சந்திப்பின்போது, கைத்தறிக் காவலன் ரமேஷ், சமூக ஆர்வலர் கோ.ஜெயவேலு மற்றும் சர்வக் கட்சியினரும் உடனிருந்தனர். ஆட்சியாளர்களிடம் நேரில் மனுக்கள், நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என்று போராடியும் நடவடிக்கை இல்லை என்று போராட்டக் குழுவினரின் மிகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
இந்த நிலையில், டிசம்பர் 21-ஆம் தேதி பள்ளியின் மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டம் நடத்த குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக, எம்எல்ஏ அமலு விஜயன், நகராட்சி சேர்மன் எஸ். செளந்தரராஜன், முன்னாள் சேர்மன் த.புவியரசி, நகராட்சி கவுன்சிலர்கள் டி.பி.என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, அர்ச்சனா நவீன், கே.எம்.ஏகாம்பரம், எம்.செளந்தரராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து அழைப்பிதழ்களையும் தயார் செய்திருந்தனர் குழுவினர். இந்தக் கூட்டம் நடத்தினால், பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கும் பிரச்னை எழக் கூடும் என்றும் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தனது செயல் வெளிப்பட்டுவிடும் என்றும் அச்சம் அடைந்த தலைமை ஆசிரியை கீதா அன்றைய தினம் விடுப்பு எடுத்துவிட்டு, வீட்டிலேயே இருந்துவிட்டார். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, அணைக்கட்டு எம்எல்ஏவும் வேலூர் மாவட்ட திமுக செயலாளருமான ஏ.பி.நந்தகுமாரை எஸ்.ரமேஷ் சந்தித்து, பள்ளியை தரம் உயர்த்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
இந்த நிலையில் 2025 ஜனவரி மாதத்தில் முதல் வாரத்தில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், பேரவைக் கூட்ட தொடர் நாளன்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஸை புதிய நீதிக் கட்சி நகரச் செயலாளர் எஸ்.ரமேஷ்,
கோ.ஜெயவேலு, வெங்கடேன் மற்றும் பலர் நேரில் சந்தித்து நினைவூட்டல் கடிதத்தையும் அளித்தனர். பின்னர், பாமக கவுரவத் தலைவரும் பாமக சட்டப் பேரவைக் குழு தலைவருமான ஜி.கே.மணியையும் எஸ்.ரமேஷ் சந்தித்து, 'தான் பாமக நகரச் செயலாளராக இருந்துபோது, முதன்முதலாக தொடங்கிய போராட்டம் இது. இந்தப் பள்ளியை தரம் உயர்த்தும் பிரச்னைக்கு சட்டப் பேரவையில் பேசி வலியுறுத்த வேண்டும்' என்றும் இந்த விவகாரத்தில் அப்போது பாமக மாவட்ட செயலாளராக இருந்த வக்கீல் என்.குமார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், ஆதரவு குறித்தும் விளக்கினார். இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் எம்எல்ஏவுமான கே.செல்வபெருந்தகையை காங்கிரஸ் நெசவாளர் அணியின் முக்கிய நிர்வாகியான கோ.ஜெயவேலு சந்தித்து, நெசவாளர்களின்
பிள்ளைகளின் உயர்கல்வி பயிலும் வகையில் கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து. சட்டப் பேரவை கேள்வி நேரத்தின்போது, பள்ளியை தரம் உயர்த்துவதன் அவசியம் குறித்து எம்எல்ஏ அமலு விஜயன் பேசினார். இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், தரம் உயர்த்த
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என பேசியிருந்தார்.
இந்த நிலையில் எஸ்.ரமேஷுக்கு,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் 3.1.2025-அன்று தேதியிட்டு அனுப்பியுள்ள பதில் மனுவில், 'குடியாத்தம் நகராட்சி பிச்சனூர் பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 மாணவர்கள் பயில வேண்டும். ஆனால் இங்கு 12 மாணவர்களே பயின்று வருகின்றனர். மேலும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து மற்றொரு உயர்நிலைப் பள்ளிக்கு குறைந்தபட்சம் ஐந்து கி.மீ. தூரம் இருக்க வேண்டும். ஆனால் இப்பள்ளியை சுற்றி 5 கிலோமீட்டருக்குள் 3 மேல்நிலைப் பள்ளிகளும் ஒரு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நகராட்சி பகுதியில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமானால் 10 கிரவுண்ட் இடவசதி இருக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளிக்கு 1500 சதுர அடி காலி மனை மட்டுமே உள்ளது. எனவே இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த விதிகளில் வழிகள் இல்லை' என்று கூறியிருக்கிறார். இந்தக் கடிதத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், கோ.ஜெயவேலு ஆகிய இருவரும் தங்களது தலைமையில் நெசவாளர்கள், பெற்றோர்கள் சிலரை அழைத்து கொண்டு வேலூர் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமியிடம் சென்று முறையிட்டனர். அப்போது, இந்தப் பள்ளி தரம் உயர்த்தினால், ஆறாம் வகுப்பில் மாணவர்கள் தொடர்ந்து படிப்பார்கள் என்றும் ஒன்பதாம், பத்தாம் வகுப்புகள் இல்லாததால்தான் ஆறாம்வகுப்பிலேயே மாணவர்கள் வேறு பள்ளிக்குச் சென்றுவிடுகின்றனர் என்றும் மேலும் பலர் ஒன்பதாம் வகுப்பில் வேறு பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் பெண் குழந்தைகள் இடைநிற்றல் ஏற்படுகிறது என்றும் விதிமுறைகளைத் தளர்த்தி இந்தப் பள்ளியைத் தரம் உயர்த்த உரிய நடவடிக்கையை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்றும் முறையிட்டனர். இதைக் கேட்ட மாவட்ட ஆட்சியாளர் சி.இ.ஓ.வை அழைத்து இந்த மனு குறித்து விரைவான விசாரணை நடத்தி, பள்ளியைத் தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி,
கே.செல்வப்பெருந்தகை, ஏ.பி.நந்தகுமார், அமலு விஜயன், நகராட்சி சேர்மன் எஸ்.செளந்தரராசன், முன்னாள் சேர்மன் த.புவியரசி, நகராட்சி கவுன்சிலர்கள் டி.பி.என்.கோவிந்தராஜ், ஏகாம்பரம், அர்ச்சனா நவீன், சி.என்.பாபு என்று பல ர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், பள்ளி தரம் உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த நெசவாளர்கள் கல்வித்துறையினர் உத்தரவால் பெரிய அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.
ஒரே வளாகத்தில் நெல்லூர்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியும், நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியும் இயங்குகிறது இது எப்படி சாத்தியம் என்று நெசவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல், குடியாத்தம் நகரின் தெற்கு பகுதியில் நெல்லூர்பேட்டையிலேயே இரு அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஜோதி மேல்நிலைப் பள்ளி, சந்தப்பேட்டையில் வள்ளலார் மேல்நிலைப் பள்ளி என ஒரு கி.மீ. சுற்றளவிலேயே நான்கு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கிவருகிறது. இதேபோல், நடுப்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நேஷனல்நிதியுதவி மேல்நிலைப் பள்ளி என 100 மீட்டர் சுற்றளவுக்குள் இயங்கி வருகிறது. இதெல்லாம் கல்வித்துறைக்கு தெரியாதா? என்ற நெசவாளர்கள் கேள்வி எழுப்புள்ளனர். கங்காதசாமி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தும் விவகாரத்தில், ஆட்சியாளர்களே உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று நெசவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment