Wednesday, 22 January 2025

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் ஆஜரானார்!

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, கல்லூரியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், இன்று, கதிர் ஆனந்த் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.

தமிழ்நாடு நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறி​யியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்​களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜனவரி 3 ஆம் தேதியன்று அதிரடி சோதனை​யில் ஈடுபட்​டனர். 44 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

கதிர் ஆனந்தின் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ரொக்கப் பணத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரத்துடன் வந்து பணத்தை எண்ணி, வேனில் கொண்டு சென்று வங்கி கிளைக்கு கொண்டு சென்று அமலாக்கத்துறையின் கணக்கில் வரவு வைத்தனர்.

மேலும், வேலூர் திமுக பிரமுகரும், துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிங்ஸ்டன் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும், சொத்து ஆவணங்கள் மற்றும் பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கிங்ஸ்டன் கல்லூரியில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்திற்கு, சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று கதிர் ஆனந்த் நேரில் ஆஜராகியுள்ளார். கடந்த 3ஆம் தேதி முதல் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளித்து வருகிறார்.

முன்னதாக, கிங்ஸ்டன் கல்லூரி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி கிங்ஸ்டன் கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

வியாபாரிக்கு மது ஊற்றிக்கொடுத்து இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரகசிய வீடியோ பதிவு: ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அர்ச்சகர் கைது!

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போ...