Friday, 3 January 2025

இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும்.. ஈரேழு உலகின் முதற்கடவுள் விநாயகர் கோவிலில் இஸ்லாமியர்கள் தரிசனமும் பரிவட்டம்!

கடந்த 50 வருடங்களாக மத நல்லிணக்கித்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வரும் தஞ்சையில் வாழும் இஸ்லாமியர்கள்!

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜ் காய்கறி மார்க்கெட்டில்  செல்வ விநாயகர் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் நடந்த மார்கழி மாத பூஜையில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அப்போது பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் சிறப்பு பூஜை, அபிஷேகத்தில் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதோடு அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நம் நாட்டில் பல இடங்களில் இருமதத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதேவேளையில் மதங்களை கடந்து சகோதரத்துவ உணர்வுடன் மக்கள் ஒன்றாக விழா எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் பல இடங்களில் இந்து, இஸ்லாமியர்கள் மதங்களை கடந்து ஒவ்வொருவரின் விழாக்களிலும் பங்கேற்று வருகின்றனர்.

இந்துக்களின் திருவிழாக்களின்போது பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மோர், பழரக ஜூஸ்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும். அதேபோல் இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்துகளையும் இந்துக்கள் ஆங்காங்கே வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தான் தஞ்சாவூரில் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

அதாவது தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜ் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் பிரசித்திப் பெற்ற செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பூஜைகள், அபிஷேகம் என்பது கோவிலில் தினமும் நடக்கும்.

அந்த வகையில் கடந்த 02.01.2025 அன்று கோவிலில் நடந்த பூஜைகளில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இஸ்லாமியர்கள் சார்பில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக கோவிலுக்கு வந்த இஸ்லாமியருக்கு பரிவட்டம் கட்டி பூசாரி மரியாதை வழங்கினர். அதன்பிறகு விநாயகரை வழிபட்ட இஸ்லாமியர்கள், நவக்கிரகத்தையும் சுற்றி வந்து வழிபட்டனர். இந்த கோவிலில் நடக்கும் மார்கழி மாத பூஜையில் இஸ்லாமியர்கள் கலந்துக் கொள்வது இது புதிது அல்ல. கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக மத நல்லிணக்கித்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இன்றைய பூஜையிலும் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் ஆஜரானார்!

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, கல்லூரியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், இன்று, கதிர...