Tuesday, 14 January 2025

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய கிராமத்தில் போலீசார் அத்துமீறல்.. விரட்டி விரட்டி கைது!

விழுப்புரத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை போலீசார் விரட்டி விரட்டி அடாவடியாக கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு மாதம் கழித்து போலீசார் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் மழையின் போது விழுப்புரம் மாவட்டம், கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது. அப்போது, விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு கிராமங்களை பார்வையிட வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். அப்போது அங்குள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மீதும், அவரது மகன் திமுக மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை வீசினர். இந்த சம்பவத்தில் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், போலீசார், இருவேல்பட்டு கிராமத்திற்குச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க ஓடியவர்களை போலீசார் விரட்டி விரட்டிக் கைது செய்துள்ளனர். நடவடிக்கை எடுக்கிறோம் என கிராம மக்களை துன்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொன்முடி மீது சேறு வீசப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தில் போலீசார் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சித்துள்ளார். "பொன்முடி வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஏழுமலை என்ற நபரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி போலீசார் மிரட்டுகின்றனர். நாட்டில் வேறு பிரச்சனையே இல்லையா?

பொன்முடி சட்டையில் சேறு பட்டது தான் நாட்டின் பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்சனையா? இதே வேகத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை விசாரித்து இருந்தால் "யார் அந்த சார் ?" என கண்டுபிடித்து இருக்கலாம். இருவேல்பட்டு கிராமத்தோடு முடியவேண்டிய பிரச்சனையை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்ற விரும்புகிறாரா அமைச்சர் பொன்முடி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

பெரியகுளம் தீர்த்தத் தொட்டியை தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் - சோத்துப் பாறை அணை செல்லும் வழியில் தீர்த்த தொட்டி அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பெரியகுளம் மற்...