வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள், இன்று காலையிலிருந்து திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இது வேலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக உள்ளவர் பூஞ்சோலை சீனிவாசன்.. திமுகவில் மாவட்ட பொறுப்பில் பதவி வகித்து வருகிறார். இவர் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில், துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, துரைமுருகனின் நெருங்கிய கட்சிப் பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மூட்டை மூட்டையாகவும். பெட்டி பெட்டியாகவும் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். அதேபோல, வேலூர் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவாகி, விசாரணையும் நடந்தது. பூஞ்சோலை சீனிவாசனுக்குப் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படிக் கைமாறின? தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தெல்லாம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகுப்பம் நடு மோட்டூர் பகுதியில் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருடன் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிற்கு வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி வருகின்றனர். 3 கார்களில் சுமார் 6 அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்களுடன் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பாதுகாப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி காட்பாடியில் திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசனுக்கு முறைகேடாக 106 ஏக்கர் அரசு நிலம் மோசடியாக பதிவு செய்த சார் பதிவாளர் (பொறுப்பு) சிவகுமார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
அரசுக்கு சொந்தமான 105.82 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தனிநபர்களுக்கு பதிவு செய்து.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை 8.85 ஏக்கர், 0.24 ஏக்கர், 0.76 ஏக்கர், 6.01 ஏக்கர், 0.36 ஏக்கர், 5.51 ஏக்கர், 4.55 ஏக்கர், 2 ஏக்கர், 24.37 ஏக்கர், 32.49 ஏக்கர், 0.70 ஏக்கர், 2.90 ஏக்கர், 3.76 ஏக்கர், 12.41 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என மொத்தம் 105.82 ஏக்கர் நிலங்களை 14 பத்திரங்கள் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அரசின் நிலத்தின் மதிப்பு சுமார் 30 கோடியாகும். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment