Thursday, 23 January 2025

தேனியில் கஞ்சா வியாபாரிகளிடம்.. டுபாக்கூர் போலீசார் நடத்திய வசூல் வேட்டை ஒரிஜினல் போலீசார் மூவரை தட்டி தூக்கி காப்பு மாட்டி சிறையில் அடைப்பு!

தேனி மாவட்டம், கம்பத்தில் கஞ்சா வியாபாரிகளிடம் ரெய்டு நடத்தி அபராதம் வசூலித்த டுபாக்கூர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு போலீசார் எனக் கூறி ஒவ்வொரு கஞ்சா வியாபாரியின் வீடு வீடாக சென்று அபராதம் வசூலித்ததாகக் கூறி அதிர வைத்திருக்கின்றனர் அந்த கும்பல்..

தேனி மாவட்டம், கம்பத்தில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் உள்ளனர். தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியாக உள்ளதால் கம்பத்திலிருந்து இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், நான்கு சக்கர வாகனங்கள் லாரி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதில் ஏராளமானோர் சிக்கி வழக்குகளுக்காக தற்போது நீதிமன்றங்களுக்கு அலைந்து வருகின்றனர். சுமார் 35க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கம்பத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த க்ரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், அப்படி போலீசார் ரெய்டு செய்வதை வைத்து ஒரு டுபாக்கூர் போலீஸ் கும்பல் கஞ்சா வியாபாரிகளிடம் கல்லா கட்டி வந்துள்ளது. கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மீதும், இவரது தாயார் லதா மீதும் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மதுரை போதைப் பொருள்  தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் காக்கி பேண்ட் அணிந்த பெண் ஒருவரும், சாதாரண டீசர்ட். பேண்ட் அணிந்த பெண் ஒருவரும், 19 வயது மதிப்புடைய இளைஞர் ஒருவரும் ஜெயக்குமார் வீட்டிற்கு வந்து கஞ்சா இருக்கிறதா? என கேட்டுள்ளனர். அதற்கு ஜெயக்குமார் தற்போது கஞ்சா விற்பது இல்லை என கூறியுள்ளார். அப்போது நாங்கள் 3 பேரும் மதுரை ஸ்பெசல் போலீஸ் பார்ட்டியிலிருந்து வருகிறோம் என கூறிவிட்டு, நீங்கள் கஞ்சா விற்பது எங்களுக்கு தெரியும் எனவே உங்கள் மீது வழக்குப் போடவா ? இல்லையென்றால் கஞ்சாவிற்கு அபராதம் போடவா? என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன பிரபல கஞ்சா வியாபாரி ஜெயக்குமார் அவர்கள் கேட்ட ரூபாய் 10 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் லதாவிடம் செல்போன் எண்ணை பெற்றுச் சென்றுள்ளனர். இதேபோல் ஜெயக்குமாரின் உறவினரான மற்றொரு கஞ்சா வியாபாரி அஜித் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய், நந்தினி என்பவரிடம் 12 ஆயிரம் ரூபாய், வீரமணி என்பவரிடம் ரூபாய் 7 ஆயிரம் என வாங்கி சென்றதாக ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் அந்த நபர்கள் மதுரையைச் சேர்ந்த ஸ்பெஷல் டீம் போலீஸ் என கூறி கொண்டு லதாவிடம் போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் . இதனால் சந்தேகமடைந்த ஜெயக்குமார் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் கம்பம் குரங்குமாயன் தெருவில் சுற்றி திரிந்த 3 பேரை கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் இளையராஜா, நாகராஜன் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் போலீஸ் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சின்னமனூர் ரைஸ்மில் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த அன்னம்(வயது 42) .அதே பகுதியைச் சேர்ந்த விஜயா(வயது 21), கருங்கட்டான்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி(வயது 19) என்பது தெரியவந்தது.

அப்போது அன்னம் என்பவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது எனவும், அவரது வீட்டின் அருகே மாட்டு கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இங்கு முத்துபாண்டியும் வேலை செய்து வந்துள்ளார். அன்னம் வீட்டின் அருகே குடியிருந்து வரும் விஜயாவும் மாட்டுகொட்டகைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விஜயா, அன்னம், முத்துப்பாண்டி ஆகியோர் பணம் சம்பாதித்து சொகுசாக வாழ வேண்டும் அதற்கு என்ன செய்யலாம்.. ? என அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

அப்போது அவரது மாட்டு கொட்டகையின் அருகே அடிக்கடி கஞ்சா புகைத்து கொண்டிருக்கும் சாமுண்டிஸ்வரன்(வயது 18) என்பவரிடம் கஞ்சாவை எங்கு விலைக்கு வாங்குகிறாய்? என அன்னம் கேட்டுள்ளார். அன்னத்திற்கு கஞ்சா விற்பனை செய்து கஞ்சா வழக்கில் சிக்கிய அனுபவம் உள்ளதால் போலீசார் கஞ்சா வியாபாரிகளிடம் எப்படி பேசுவார்கள், மிரட்டுவார்கள் என்பது குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ளார். இதனால் கஞ்சா விற்பனை செய்வதை காட்டிலும், கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பணம் சம்பாதிப்பது குறித்து அன்னம் தலைமையில் விஜயா, முத்துப்பாண்டி ஆகிய 3 பேர் சேர்ந்து திட்டம் வகுத்தனர்.

அதில் போலீஸ் மற்றும் சி.ஐ.டி போலீஸ் போல் சென்று கஞ்சா வியாபாரிகளை எப்படி மிரட்டி பணம் பறிக்கலாம் ? என முடிவு செய்தனர். பின்னர் போலீஸ் உடைக்கு என்ன செய்யலாம் என யோசித்துள்ளனர். அப்போது விஜயா தனது சகோதரர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊர்காவல் படையில் இருந்துவிட்டு , அங்கிருந்து விலகி வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரது காக்கி உடை இருப்பதாக விஜயா கூறியுள்ளார்.

இதையடுத்து காக்கி உடையை விஜயா அணிந்து கொள்வது எனவும், அன்னம் மற்றும் முத்துப்பாண்டி சாதாரண உடையில் பேண்ட் சர்ட் அணிந்து கொண்டு சி.ஐ.டி போலீஸ் போல் செயல்படுவது என முடிவு செய்தனர். மேலும் கஞ்சா வியாபாரிகளின் வீட்டை அடையாளம் காட்டுவதற்காக சாமுண்டிஸ்வரனை பயன்படுத்தி கொண்டனர்.

திட்டம் வகுத்தபடி கம்பத்திலுள்ள கஞ்சா வியாபாரிகளின் வீட்டிற்கு சென்று பணம் பறித்துள்ளனர். அப்போது கஞ்சா வியாபாரிகளிடம் தாங்களே கஞ்சாவை தருவதாகவும் அதனை விற்பனை செய்து தருமாறும் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வியாபாரிகள் எந்த போலீசாரும் கஞ்சாவை விற்பனை செய்ய தரமாட்டார்களே -? என சந்தேகமடைந்து பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 3 பேரையும் கையும் களவுமாக மாட்டி கொண்டதாக தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து டுபாகூர் சி.ஐ.டி போலீஸ் கும்பலான விஜயா, அன்னம், முத்துப்பாண்டி, சாமுண்டிஸ்வரன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து, நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியம், கே. வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி, கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன்...